பரிதாபம்.. பாகிஸ்தானில் ராணுவத்தை பகைத்தால் இப்படித்தான்! இம்ரான் கானை வீழ்த்திய மாஸ்டர் பிளான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் பிரதமர்கள் அந்நாட்டு ராணுவத்தை பகைக்க கூடாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான் என்ற கூற்று உள்ளது. அது மீண்டும் அங்கு உண்மை ஆகியுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பாகிஸ்தான் ராணுவம்தான்.
பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருப்பவர்கள் சொல்வதே அங்கு சட்டம் என்ற நிலை நிலவி வருகிறது. ஒருவேளை ஜெனரல்கள் சொல்வதை மீறினால் அங்கு ஆட்சியே கவிழும் நிலை கூட ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்கள் பல ராணுவம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யப்பட்டுள்ளது.

ராணுவ ஆதரவு
பாகிஸ்தான் பிரதமராக 2018ல் இம்ரான் கான் தேர்வான போதே அவர் தன்னை எதிர்த்த எல்லோரையும் எளிதாக சமாளிக்க காரணம் ராணுவம் என்றே கூறப்பட்டது. அந்நாட்டு ராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இம்ரான் கான் இருந்தார். ராணுவம் சொல்வதை எல்லாம் கேட்கும் தலையாட்டி பொம்மை என்று கூட இம்ரான் கான் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட இம்ரான் கானுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் கடந்த வருடம் ஏற்பட்ட சில மோதல்கள் இப்போது அவரின் ஆட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது.

மோதல் என்ன?
இந்த மோதல் என்பது ஒரு பதவியை தேர்வு செய்வதில் இருந்துதான் தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உளவு படை தளபதியாக நதீம் அஞ்சும் கடந்த வருடம் நியமிக்கப்பட இருந்தார். ஆனால் இவரின் நியமனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதைய உளவுப்படை தளபதி பைஸ் ஹமீத்தான் தொடர்ந்து இதில் தளபதியாக நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கருதினார். ஆனால் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். நதீம் அஞ்சும்தான் புதிய ஐஎஸ்ஐ தலைவராக வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார்.

மோதல் வெடித்தது
நதீம் அஞ்சுமிற்கு ஆதரவாக ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா பல இடங்களில் தொடர்ந்து பேசி வந்தார் வருகிறார். ஆனால் இதை மதிக்காமல் இம்ரான் கான் ஹமீதை தொடர்ந்து ஐஎஸ்ஐ தலைவராக செயல்பட அனுமதித்தார். இந்த நியமனம்தான் இம்ரான் கானுக்கும் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவிற்கும் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. அப்போதே கூட்டம் ஒன்றில் நான் சொல்கிற ஆளை பதவியில் நியமிக்கவில்லை என்றால் உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று ராணுவ தளபதி பாஜ்வா எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

பொருளாதாரம்
அந்நாட்டு ராணுவத்தின் ஆதரவு இன்றி ஆட்சியில் இருக்கவே முடியாது. ஆனால் இதை விரும்பாமல்.. இம்ரான் கான் தாண்ட கூடாத லைனை கிராஸ் செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் எதிர்கட்சிகளை ராணுவம் மாஸ்டர் பிளான் போட்டு இணைத்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் தற்போது நவாஸ் ஹெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, மவுலானா பசேல் ஊர் ரஹ்மானின் ஜாமியா உலமா இ இஸ்லாம் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் ஜனநாயக கூட்டணியை உருவாக்கி உள்ளது.

இம்ரான் பதவி
இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்சிகள் இணைந்து தற்காலிக கூட்டணியாக உள்ளன. ராணுவத்தின் அழுத்தம் காரணமாக இந்த கூட்டணி தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் இம்ரானுக்கு வழங்கிய ஆதரவை இன்று வாபஸ் பெற்றது. இதன் காரணமாக பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

காரணம்
எதிர்க்கட்சிகள் அங்கு ஒன்றாக சேர ராணுவ தளபதி பாஜ்வா போட்டுக்கொடுத்த பிளான்தான் காரணம் என்கிறார்கள். இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரிசையாக அங்கு எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். மொத்தம் 22 எம்பிக்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். இதற்கு பின்பும் அந்நாட்டு ராணுவமே இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2 வருடத்தில் அந்நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது.

கூடி வந்தது
நாட்டில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இப்படி எல்லாம் இம்ரான் கானுக்கு எதிராக கூடி வந்தது. இந்த நிலையில்தான் மக்கள் எதிர்ப்பையும், ராணுவம் கொடுக்கும் ஆதரவையும் வைத்துக்கொண்டு ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இம்ரான் கானின் அரசை தூக்கி அடிக்க பிளான் போட்டு தற்போது அதில் அந்நாட்டு ராணுவம் வெற்றியும் பெற்றுள்ளது என்கிறார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
பாகிஸ்தானில் இன்று நடக்கும் நம்பிக்கை இல்லாத தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடையவே அதிக வாய்ப்புள்ளது. அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பி உள்ளது. இதனால் இம்ரான் கான் கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு இம்ரான் தலைமையிலான அரசு கவிழ உள்ளது. எந்த ராணுவம் இம்ரான் வளர காரணமாக இருந்ததோ தற்போது அதே ராணுவம் அவரின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது!












Click it and Unblock the Notifications