40+ நாடுகள் சேர்ந்து வந்தாலும்.. ஒற்றை ஆளாக திமிறும் ரஷ்யா.. மேற்கு உலகை ஆட வைக்கும் புடின்! எப்படி?
மாஸ்கோ: மொத்த மேற்கு உலகமும் சேர்ந்து வந்தாலும்.. பொருளாதார தடைகளை பற்றி கவலைப்படாமல் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்யா தனித்து விடப்பட்டு இருந்தாலும், அதை பற்றி எல்லாம் அந்நாட்டின் அதிபர் புடின் கவலை படுவதாக தெரியவில்லை.
Recommended Video

நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாக்க விரும்புகிறோம்.. உக்ரைன் மேற்கு உலக நாடுகளின் பேச்சை கேட்டு ஆடுகிறது. உக்ரைன் மக்களே அந்நாட்டு அரசின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை. உக்ரைனில் நடக்கும் இன அழிப்பை தடுக்கும் வகையிலும், அங்கு நல்ல அரசை நிறுவும் வகையிலும் நாங்கள் உக்ரைன் உள்ளே அமைதிப்படையை அனுப்புகிறோம்.
சிறப்பு ராணுவ ஆபரேஷனை மேற்கொள்ளும் வகையில் நாங்கள் அமைதிப்படையை உள்ளே அனுப்புகிறோம் என்று புடின் ரஷ்ய - உக்ரைன் போரின் முதல்நாள் தெரிவித்து இருந்தார். அப்போது தொடங்கிய போர் கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது.

பொருளாதார தடைகள்
கடந்த ஒரு மாதத்தில் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. நேட்டோ நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா என்று மேற்கு உலக நாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்து ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்களை வாங்க மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யாவை பண பரிவர்த்தனை மெசேஜிங் தளமான swiftல் இருந்தும் உலக நாடுகள் நீக்கி உள்ளன.

எதிர்பார்த்தது
அதோடு ரஷ்யாவின் அலிகார்க்ஸ் கணக்குகளும் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யா மீது கணக்கில் அடங்காத பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதை எல்லாம் எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை எதிர்பார்த்தே ரஷ்யா களமிறங்கியது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரஷ்யா அசைந்து கொடுக்கவில்லை
ரஷ்யாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை மொத்தமாக ரஷ்ய அரசு பறிமுதல் செய்தது. ரஷ்யாவில் இருக்கும் வெளிநாட்டு விமானங்களை பறிமுதல் செய்தது. அமெரிக்காவுடன் விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள உறவை முறித்துக்கொண்டது. அதேபோல் வரும் நாட்களில் உலக நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்வதிலும் ரஷ்யா கறார் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உலக நாடுகளுக்கு அதிக அளவு யுரேனியம் ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யா என்பதால் பல்வேறு நாடுகள் பாதிப்படைய தொடங்கி உள்ளன.

அச்சம்
இந்த பொருளாதார தடைகளால் ரஷ்யா பாதிக்கப்பட்ட அளவிற்கு அமெரிக்காவும் பாதிக்கப்பட்டு வருகிறது. போதிய எண்ணெய் இல்லாமல், எரிவாயு இல்லாமல் அமெரிக்கா ஈரான், வெனிசுலா போன்ற பகையாளிகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா இந்த போரில் பின்னடைவை சந்தித்துள்ளதாக மேற்கு உலக நாடுகள் செய்திகளை வெளியிட்டு வந்தாலும் கூட ரஷ்யா என்னவோ, நாங்கள் திட்டமிட்டபடி சென்று கொண்டு இருக்கிறோம். போரில் நாங்கள் பின்னடைவை சந்திக்கவில்லை. எல்லாம் பிளான்படிதான் செல்கிறது என்று உறுதியாக சொல்லி வருகிறது.

சோஷியல் மீடியா வார்
இந்த போரின் தொடக்கத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள்தான் சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தியது. பிடனை பற்றி நெகட்டிவ் செய்திகள், கடுமையான விமர்சனங்கள் அதிகம் வைக்கப்பட்டன. ஆனால் அங்கும் தற்போது ரஷ்யா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உக்ரைனில் அமெரிக்கா நிறுவி உள்ள பயோ நிறுவனங்களை வைத்து பயோ ஆயுத எச்சரிக்கையை ரஷ்யா விடுத்தது இதில் மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஐநா - சர்வதேச நீதிமன்றம்
ரஷ்யா தரப்பு நியாயமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. அதோடு ஐநாவில் தாக்கல் செய்யப்படும் தீர்மானங்களையும் கூட ரஷ்ய அதிபர் புடின் பெரிதாக சட்டை செய்துகொள்வது இல்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ செய்தது. அதேபோல் சர்வதேச நீதிமன்றம் கொடுத்த போர் நிறுத்த உத்தரவை, பின்பற்ற மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்தது. சர்வதேச அமைப்புகளில் அழுத்தம் எதுவும் ரஷ்யாவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யா மீது பயம் இருப்பதாலேயே உக்ரைன் வான்பகுதியை மூட உலக நாடுகள் விரும்பவில்லை. அப்படி செய்தால் அது ரஷ்யாவுடன் நேரடி போருக்கு வழி வகுக்கும், ரஷ்யாவிடம்தான் உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், இதை மேற்கு உலக நாடுகள் விரும்பாது. இந்த எச்சரிக்கையை ரஷ்யாவும் விடுத்துள்ளது. அதோடு ரஷ்யாவின் கச்சா எண்ணெயை நம்பித்தான் இப்போது ஐரோப்பா நாடுகள் உள்ளன. இதனால் ரஷ்யாவை நேரடியாக எதிர்க்க முடியாமல் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் திணறி வருகின்றன.

கைவிட்ட சீனா
இந்த போர் விஷயத்தில் ரஷ்யாவை சீனா தொடக்கத்தில் தீவிரமாக ஆதரித்தது. ஆனாலும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் வரலாம் என்ற அச்சம் காரணமாக சீனா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி வருகிறது. சீனா ரஷ்யாவை முன்பு ஆதரித்த அளவிற்கு இப்போது தீவிரமாக ஆதரிக்கவில்லை என்பதே நிதர்சனம். சீனா அதேபோல் ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகளை வழங்க மாட்டோம் என்றும் அறிவித்துவிட்டது. ஆனால் இதெல்லாம் ரஷ்யாவை பாதித்தது போல தெரியவில்லை.

தனியாக சமாளிக்கிறார்
தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. சீனாவின் நேரடி உதவி இன்றியே ரஷ்யா இதில் தனித்து போரிட்டு வருகிறது. கிட்டத்தட்ட நேற்றோ நாடுகள் 30, நேட்டோ அல்லாத நாடுகள் 10ன் என்று 40 நாடுகள் வரை ரஷ்யாவை எதிர்க்கின்றன. இதில் ரஷ்யா பிற நாடுகளின் நேரடி (சிரியா தவிர) ஆதரவு இன்றி தனி ஆளாக போராடிக்கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும் கூட மேற்கு உலகத்தின் முன் ரஷ்யா மண்டியிட மறுத்து வருகிறது என்பதே நிதர்சனம்.. போர் இன்னும் செல்ல செல்ல என்ன நடக்கும்.. ரஷ்யா பக்கம் வேறு நாடுகள் இணையுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications