வங்கதேச சுதந்திர போர் சிலை கூட சேதம்.. வன்முறையை நடத்துவது பாக். ஆதரவாளர்கள்? என்ன தான் நடந்தது?
டாக்கா: வங்கதேசத்தில் இன்னும் முழுமையான அமைதி திரும்பாத நிலையில், அந்நாட்டின் விடுதலையை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிலையையும் அங்கே சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான மனநிலை கொண்ட சிலர் இந்த சிலையைச் சேதப்படுத்தியதாகக் காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் திடீரென கிளம்பிய மாணவர் போராட்டம் அந்நாட்டு அரசியலையே மொத்தமாகப் புரட்டிப் போட்டது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்ல வன்முறையாக மாறியது.

ஒரு கட்டத்தில் வன்முறை கையைவிட்டுச் சென்ற நிலையில், வெறு வழியின்றி அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
சேதம்: இருப்பினும், அங்கு வன்முறை முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து ஆங்காங்கே தாக்குதல்கள் நடந்தே வருகிறது. இதற்கிடையே வங்கதேச விடுதலையை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிலையையும் அங்கே சிலர் சேதப்படுத்தியுள்ளனர். கடந்த 1971இல் நடந்த வங்கதேச விடுதலை போருக்குப் பிறகு பாகிஸ்தான் சரணடைந்த தருணத்தைக் குறிப்பிடும் வகையிலான இந்த சிலையை வங்கதேசத்தில் உள்ள யாரோ மர்ம ஆசாமிகள் சிலர் உடைத்துள்ளனர். அது தொடர்பான போட்டோக்களை காங்கிரஸ் சசி தரூர் தனது ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.

சதி தரூர் குற்றச்சாட்டு: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "1971 ஷாஹீத் நினைவு வளாகத்தில் உள்ள இதுபோன்ற சிலைகள் இந்திய- விரோத ஆசாமிகளால் சேதப்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. அங்கே இந்தியக் கலாச்சார மையம், கோவில்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளின் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடந்து வரும் நிலையில், இப்போது இந்த சிலையைச் சிதைத்துள்ளனர்.
அங்கே முஸ்லீம் மக்களே சிறுபான்மை இந்துக்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வந்தாலும் இதுபோன்ற சம்பவங்களும் நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஏன் முக்கியம்: 1971ல் நடந்த இந்த போர் வங்கதேசத்தை விடுவித்தது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கும் அது மிகப் பெரிய அடியாகவே இருந்தது. பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, இந்திய ராணுவம் மற்றும் வங்கதேசத்தின் முக்தி பாஹினியிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையே அந்த சிலை சித்தரித்தது. அப்போது இந்தியாவின் கிழக்கு கமேண்ட் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து இருந்தது.
பாகிஸ்தான் மேஜர் மேஜர் ஜெனரல் நியாசி தனது 93,000 வீரர்களுடன் சரணடைந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரே நேரத்தில் இத்தனை வீரர்கள் சரணடைந்தது அதுவே முதல்முறையாகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிலையைத் தான் இப்போது மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சிலையை ஏன் சம்பந்தமே இல்லாமல் சேதப்படுத்தியுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அங்குள்ள பாக். ஆதவாளர்கள் இந்த வன்முறையை நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் இப்போது என்ன நிலை: தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டார். ஹசீனாவுடன் சேர்ந்து பல முக்கிய அதிகாரிகளும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இருந்தாலும் வங்கதேசத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வரத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும், அங்குச் சிறுபான்மையினராக இருக்கும் இந்து குடும்பங்கள், கோயில்கள் மற்றும் இந்துக்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தே வருகிறது. வங்கதேச இந்துக்கள் எப்போதும் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கே ஆதரவாக இருந்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தத் தாக்குதல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications