பெட்ரோல் முதல் வர்த்தக ரூட் வரை! ஈரான் தேர்தலில் சீர்திருத்தவாதி வெற்றி.. இந்தியா உடனான உறவு மாறுமா?
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் பெசெஷ்கியன் வென்று அதிபராக உள்ளார். இந்தியாவுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே பல காலமாக நல்லுறவு இருந்து வரும் நிலையில், பெசெஷ்கியன் இப்போது வென்றுள்ளதால் இரு தரப்பிற்கும் இடையே உறவு அடுத்து எப்படி செல்லும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் ரவுண்டில் எந்தவொரு வேட்பாளருக்கும் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் 2 இடங்களை பெற்றவர்கள் இடையே 2ஆவது ரவுண்டு வாக்குப்பதிவு நடந்தது.

இந்தியா- ஈரான் உறவு: அதில் 54% வாக்குகளை பெற்று சயீத் ஜலிலியை வீழ்த்தி பெசெஷ்கியன் வெற்றி பெற்றார். சீர்திருத்தவாதியாக அறியப்படும் பெசெஷ்கியன் வென்றுள்ள நிலையில், அவரது ஆட்சியில் பல முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றே தெரிகிறது. அதேநேரம் இவரது வெற்றி இந்தியா ஈரான் உறவை எப்படி மாற்றும் என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே வரலாற்று ரீதியாக வலுவான பொருளாதார உறவு இருக்கிறது. இப்போது புதிதாக அதிபராகும் பெசெஷ்கியன் சீர்திருத்தவாதியாகவே அறியப்படும் நிலையில், இது இந்தியா ஈரான் உறவு அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..
சாபஹர் துறைமுக திட்டம்: குறிப்பாக இரு தரப்பும் முதலில் சாபஹர் துறைமுக திட்டத்தில் கவனம் செலுத்தும் என தெரிகிறது. இந்த திட்டத்தில் இந்தியா ஏற்கனவே அதிகளவில் முதலீடுகளை செய்துள்ளது. புவிசார் அரசியலில் இது மிக முக்கிய திட்டமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு இந்தியா நேரடியாக ஆப்கானிஸ்தான் மற்றும் இதர மத்திய ஆசிய நாடுகள் உடன் வர்த்தகம் செய்ய இந்த துறைமுகம் பெரியளவில் உதவும் என்றே கூறப்படுகிறது.
ஷாஹித்-பெஹெஷ்டி துறைமுக முனையத்தின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு 120 மில்லியன் டாலரை (சுமார் 1000 கோடி ரூபாய்) உறுதியளித்துள்ளது. மேலும், ஈரானில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக $250 மில்லியன் (சுமார் ரூ.2000 கோடி) கடன் வழங்க உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது. இப்போது பெசெஷ்கியன் அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுக் கொள்கை பெரியளவில் மாற வாய்ப்பில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். சிறுசிறு விஷங்களில் மாற்றம் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஈரான் வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் இருக்காது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கும் ஈரான் முக்கிய நாடாகவே இருக்கிறது. ஏனென்றால், இந்தியா கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் ஒன்றாகும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நம்பகமான ஒரு நாட்டை எதிர்பார்க்கிறது. அதேநேரம் குறைந்த செலவிலும் கச்சா எண்ணெய் வாங்க ஈரானை இந்தியா எதிர்நோக்குகிறது.
அதேபோல பெசெஷ்கியன் மத்திய கிழக்கில் உள்ள தனது அண்டை நாடுகள் உடன் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாள்கிறார் என்பதும் இந்தியாவால் உன்னிப்பாக கவனிக்கப்படும். இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பெசெஷ்கியான், என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே அந்த பிராந்தியத்தின் அமைதி இருக்கும்.
முக்கியம்: அதேபோல INSTC எனப்படும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தாழ்வாரமும் இந்தியா ஈரான் இடையே முக்கியமான விஷயமாக பார்க்கப்படும். இது இந்தியாவை ஈரான் வழியாக ரஷ்யாவுடன் இணைக்கும் போக்குவரத்து வழித்தடமாகும். இது வர்த்தகம் உள்ளிட்ட பல வகைகளில் இரு தரப்பிற்குமே உதவும் என்பதால் இத்திட்டமும் முக்கியமாக எதிர்நோக்கப்படும்.
இப்படி இந்தியாவும் ஈரானும் இணைந்து செயல்பட பல திட்டங்கள் இருக்கும் நிலையில், பெசெஷ்கியன் ஆட்சியில் இரு தரப்பு உறவு மேம்படவே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications