வீட்டை உடைத்த ஹமாஸ் .. 10 மாத இரட்டை குழந்தைகளை மறைத்து காப்பாற்றி உயிரை விட்ட இஸ்ரேலிய தம்பதி
ஜெருசேலம்: ஹமாஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய தம்பதியினர், பயங்கரவாதிகள் தங்கள் வீட்டிற்குள் நுழையும் முன்பே, தங்கள் 10 மாத இரட்டைக் குழந்தைகளை அவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்தனர். இதனால் அந்த இரண்டு குழந்தைகளும் உயிர் தப்பி உள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர்,கடந்த சனிக்கிழமை முதல் தீவிரமான தாக்குதலை தொடங்கி உள்ளனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த கொடூர தாக்குதலில் ஏராளமான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

காசா பகுதியில் இருந்து திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடந்த சனிக்கிழமை சுட்டுத்தள்ளினர். பல பெண்களை இருசக்கர வாகனங்கள், கார்களில் வைத்து கடத்தினார்கள். வீடுவீடாக போய் பல இஸ்ரேலியர்களை கொன்று குவித்தார்கள்.
இதனிடையே காசாவில் இருந்து கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தெற்கு இஸ்ரேலில் உள்ள Kfar நகரில் 10 மாத இரட்டை குழந்தைகளுடன் 30 வயதாகும் Itai மற்றும் Hadar Berdichevsky ஆகிய இளம் இஸ்ரேலிய தம்பதியினர் வசித்து வந்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் ஹமாஸ் இயக்கத்தினர் வீடுவீடாக புகுந்து இஸ்ரேலியர்களை கொல்ல தொடங்கினர்.
அப்போது இஸ்ரேலிய தம்பதியினர் எப்படி சாகப்போகிறோம். நம் குழந்தைகளையாவது எப்படியாவது மறைத்து வைத்து காப்பாற்றுவோம் என்று முடிவு செய்தனர். இதன்படி தங்கள் இரட்டைக் குழந்தைகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மறைத்து வைத்துவிட்டனர். அப்போது அங்கு வந்த ஹமாஸ் இயக்கத்தினர் Itai மற்றும் Hadar Berdichevsky ஆகிய இருவரையும்கொன்றுவிட்டு சென்றார்கள். முன்னதாக தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் உயிர் பிழைக்க முடியவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன,
இதனிடையே இளம் தம்பதியினர் மறைத்து வந்த 10 மாத இரட்டை குழந்தைகள்,14 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டன. இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் குழந்தைகளை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே ஹமாஸ் பயங்கராவதிகள் சனிக்கிழமை எல்லைக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்களை படுகொலை செய்தார்கள். அதன்பிறகு இஸ்ரேல் மற்றும் காஸாவில் 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் இயக்கத்தினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய போர் விமானங்கள் இடைவிடாமல் காசா பகுதியைத் தாக்கி வருகின்றன.
இதனிடையே ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் தலையை துண்டிக்கும் கொடூரமான செயல்களின் காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளது. இது கொடூரமான காட்டுமிராண்டித்தனம் என உலக நாடுகள் கண்டித்துள்ளன.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஹமாஸ் குழுவை ஐஎஸ்ஐஎஸ் உடன் ஒப்பிட்டதுடன், அவர்களை கூண்டோடு அழிக்கப்போவதாக சபதம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் கூட இதுபோன்ற அட்டூழியங்கள் செய்ததை நாங்கள் பார்த்ததில்லை. குழந்தைகள் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இங்கு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத அட்டூழியங்கள் நடந்துள்ளன.
உலகம் ஐஎஸ்ஐஎஸ்ஸை தோற்கடித்தது போல் நாங்கள் ஹமாஸை அழிப்போம்.இந்த போரின் முடிவில், இஸ்ரேலைத் தாக்கியது ஒரு பயங்கரமான தவறு என்பதை எங்கள் எதிரிகள் அனைவரும் நிச்சயம் அறிவார்கள். அடுத்த சில நாட்களில் நாங்கள் எதிரிகளுக்கு செய்யப்போகும் விஷயம் பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும். ஹமாஸ் செயல்படும் எந்த இடமும் மொத்தமாக அழிக்கப்படும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications