உலகின் 3ஆவது எய்ட்ஸ் நோயாளி குணமடைந்தார்.. வாய்ப்பே இல்லை சொன்ன ஆய்வாளர்கள்! இது எப்படி சாத்தியம்
எய்ட்ஸ் நோயில் இருந்து மூன்றாவது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார்.
பெர்லின்: உலகிலேயே மூன்றாவது நபராக ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் எச்ஐவி பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். எய்ட்ஸில் இருந்து யாராலும் குணமடைய முடியாது என்று சொல்லப்படும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
உலகிலேயே மிக மோசமான நோய்களில் ஒன்றாக எய்ட்ஸ் கருதப்படுகிறது. எச்ஐவி காரணமாக ஏற்படும் இந்த எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தவே முடியாது என்றே சொல்லி வந்தனர். இதனால் உலகெங்கும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அறிகுறிகளைக் குறைக்க மட்டும் சிகிச்சை வழங்கப்படும். இந்தச் சூழலில் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த உலகெங்கும் தீவிரமான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ்
இந்த எய்ட்ஸ் பாதிப்பு என்பது வயது வந்தோருக்கு பாலியல் உறவு மூலம் மட்டும் பரவுவதில்லை. முறையான பரிசோதனை இல்லாமல் செய்யப்படும் ரத்த டிரான்ஸ்ஃபர், டாட்டூ போடுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. அதேபோல பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்தால்.. எதுவுமே அறியாத அவர்களின் குழந்தைகளும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகக் குழந்தைகளுக்கும் கூட இந்த கொடூர எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுவிடுகிறது.

பெரிய கஷ்டம்
எய்ட்ஸை குணப்படுத்த முடியாது என்பதால்.. இந்த குழந்தைகள் கடைசி வரை எய்ட்ஸ் நோயுடனேயே வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் அனைவரும் வியக்கும் வகையில் எய்ட்ஸ் நோயாளி ஒருவர் அதில் இருந்து குணமடைந்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த 53 வயதான நபர் எய்ட்ஸில் இருந்து குணமடைந்துள்ளார். உலகில் எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து குணமடையும் 3ஆவது நபர் இவர் ஆவார்.

குணமடைந்துள்ளார்
இவர் எச்ஐவி மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் இவரது உடலில் மீண்டும் எச்ஐவி கண்டறியப்படவில்லை. இதனால் இவர் எய்ட்ஸில் இருந்து குணமடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட எச்.ஐ.வி-எதிர்ப்பு மரபணு மாற்றத்தைக் கொண்டவரின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் எய்ட்ஸில் இருந்து குணமடைந்துள்ளார். இந்த சிகிச்சை முறை என்ன.. இதனால் எய்ட்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்பதைப் பார்க்கலாம். அதற்கு முன்பு இதுவரை எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் குறித்துப் பார்ப்போம்.

ஜெர்மனி
ஜெர்மனியைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் தனது ரத்த கேன்சருக்காக 2007, 2008 ஆண்டுகளில் இருமுறை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு ஸ்டெம் செல் கொடுத்தவர் CCR5-டெல்டா 32 மரபணு மாற்றத்தைக் கொண்டிருந்தார். இதன் மூலம் இவருக்கு இருந்த எய்ட்ஸ் பாதிப்பும் குணமாகிவிட்டது. சாகும் வரை இவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படவே இல்லை. அதேபோல 2019இல் லண்டன் நோயாளி ஆடம் காஸ்டில்ஜோவுக்கு இதேபோல சிகிச்சை தரப்பட்டது. அவரும் எய்ட்ஸ் நோயில் இருந்து குணமடைந்தார்.

மூன்றாவது நபர்
இப்போது மூன்றாவது நபராக ஜெர்மனியைச் சேர்ந்த மற்றொருவர் எய்ட்ஸில் இருந்து குணமடைந்துள்ளார். அவர் 4 ஆண்டுகளாக எய்ட்ஸ் மருந்துகளை எடுத்துக் கொள்ளாத போதிலும், அவரது உடலில் மீண்டும் எச்ஐவி வரவில்லை. இதில் இருந்து பார்க்கும் போதே... CCR5-டெல்டா 32 மரபணு மாற்றம் எச்ஐவியை தடுப்பது தெளிவாகத் தெரிகிறது. அதென்ன CCR5-டெல்டா 32 என்பதைப் பார்க்கலாம்.

எப்படி
எச்ஐவி வைரஸ் மனித உடலில் உள்ள CD4 நோயெதிர்ப்பு செல்களைத் தாக்குகிறது. இதால் அந்த நபரால் இரண்டாம் நிலை நோய்களை எதிர்த்துப் போராட முடிவதில்லை.. CD4 செல்களின் மேலே CCR5 ஏற்பிகள் உள்ளன. இதுவே எச்ஐவி வைரஸ் மனித செல்களில் நுழையக் காரணமாக உள்ளது. இருப்பினும், CCR5-டெல்டா 32 என்பது எச்ஐவி வைரஸ் நுழைவாயிலாகப் பயன்படுத்தப்படும் இந்த ஏற்பிகளை உருவாக்குவதே தடுக்கிறது. இதுவே அவர்கள் எய்ட்ஸில் இருந்து விலக்கியே வைத்துள்ளது. உலகில் ஒரு சதவிகித பேரிடம் மட்டுமே CCR5-டெல்டா 32 பிறழ்வின் இரண்டு பிரதிகளும் இருக்கிறது. அதேபோல 20 சதவீதம் பேரிடம் ஒரு பிறழ்வு இருக்கிறது, அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய வம்சாவளியினர். இவர்கள் மத்தியில் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படுவது குறைவாகவே உள்ளது.

கடினம்
உலகெங்கும் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் பாதிப்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பிறழ்வு இருக்கும் கொடையாளர்களைக் கண்டறிவதே கடினம்,, அப்படியே கண்டறிந்தாலும், அவர்கள் அனைவருக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமில்லை. ஏனென்றால், இதில் அதிக ஆபத்துகள் உள்ளன. இதனால் இந்த வகை சிகிச்சை என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும், இப்போது மூன்று பேர் எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், வரும் காலத்தில் மேலும் பலருக்கு சிகிச்சையளிக்கும் முறையை உருவாக்குவோம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications