"வான்டட் தாலிபான்".. ஆப்கான் உள்துறை அமைச்சர் தலைக்கு அமெரிக்கா விதித்த விலை.. ப்பா இவ்வளவு கோடியா!
காபூல்: ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் சிராஜுதீன் ஹக்கானி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் மிகப்பெரிய தீவிரவாதி ஆவார். இவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு அமெரிக்கா பல கோடி சன்மானம் வழங்குவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அங்கு இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை நேற்று தாலிபான்கள் வெளியிட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியேறியது. அதன்பின் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தலைவர்களை முக்கியமாக பிரதமரை தேர்வு செய்வதில் தாலிபான்கள் இடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. முல்லா பாராதார் அல்லது அனாஸ் ஹக்கானி இரண்டு பேரில் ஒருவர்தான் பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர்களுக்கு இடையில் பிரதமர் ஆவதில் கடும் மோதல் நிலவியது. ஹைபதுல்லா அகுண்சாடா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாற்றம்
ஆனால் நேற்று இடைக்கால தாலிபான் அரசு அறிவிக்கப்பட்டது. இதில் முல்லா ஹாசன் அகுண்சாடா நாட்டின் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டார். ஹைபதுல்லா அகுண்சாடாவிற்கு நெருக்கமான தலைவராக பார்க்கப்பட்ட இவர் அங்கு தலைமை கவுன்சில் தலைவராக தாலிபான் குழுவில் செயல்பட்டு வந்தார். 1996ல் நடந்த தாலிபான் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முல்லா கானி பாராதார் நாட்டின் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார்?
முல்லா கானி பாராதார் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இவர்தான் தோஹாவில் தாலிபான் அமெரிக்கா ஒப்பந்தம் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர். ஆனால் ஆச்சர்யமாக இவருக்கு துணை பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு அனாஸ் ஹக்கானிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இவரின் தம்பி சிராஜுதீன் ஹக்கானிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உச்சபட்ச தலைவர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் ஹைபதுல்லா அகுண்சாடா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான அரசு அறிவிப்பு வெளியாகும் போது இது தொடர்பாக அறிவிப்பும் வெளியாகும்.

தேடப்படுகிறார்கள்
இந்த தாலிபான் அரசில் 33 அமைச்சர்கள், நிர்வாகிகள், முல்லாக்கள் ஐநாவால் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஆவர். அந்த நாட்டின் பிரதமர் முல்லா ஹாசன் அகுண்சாடாவே தடை செய்யப்பட்ட தீவிரவாதி லிஸ்டில் இருக்க கூடியவர்தான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் சிராஜுதீன் ஹக்கானி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் மிகப்பெரிய தீவிரவாதி ஆவார். இவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு அமெரிக்கா பல கோடி சன்மானம் வழங்குவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எத்தனை கோடி
இவரை பல்வேறு தாக்குதல்களில் அமெரிக்கா தேடி வந்தது. இவர் ஹக்கானி குழுவை சேர்ந்தவர். இந்த ஹக்கானி குழு பாகிஸ்தான் நாட்டிற்கு நெருக்கமான தாலிபான் பிரிவு ஆகும். ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் இது தீவிரமான கொள்கையும், பாகிஸ்தானின் நேரடி ஆதரவும் கொண்ட குழுவும் ஆகும். இந்த குழுவின் இரண்டாம் கட்ட தலைவரான சிராஜுதீன் ஹக்கானிதான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய போகும் புதிய உள்துறை அமைச்சர். சர்வதேச அளவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகளில் இவர் தேடப்பட்டு வருகிறார்.

சன்மானம்
இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு அல்லது இவரின் இருப்பிடம் குறித்து டிப்ஸ் கொடுப்பவர்களுக்கு 36 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என்று அமெரிக்கா 2008ல் அறிவித்தது. 2008ல் காபூலில் ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில்லை 6 பேர் கொல்லப்பட்டனர். இதில் சிராஜுதீன் ஹக்கானிதான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதோடு ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஹாமித் கார்சாயை 2008ல் இவர் கொலை செய்ய முயன்றார். குண்டு வைத்து கொலை செய்ய முயன்றார். ஆனால் ஹாமித் அப்போது தப்பிவிட்டார்.

எப்பிஐ
இதன் காரணமாக அமெரிக்காவின் எப்பிஐ, சிஐஏ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றங்களுக்காக இவரை தீவிரமாக தேடி வந்தது. இதன் பொருட்டே பென்டகன் இவரின் தலைக்கு 36 கோடி ரூபாயை சன்மானமாக விதித்தது. அப்படி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஆப்கான் தாலிபான் ஒருவர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் உள்துறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications