இலங்கையில் தமன்னா ஆட்டத்தை பார்க்க முண்டியடித்த இளசுகள்.. மயங்கிய பெண்கள்.. கட்டுப்படுத்தவே முடியல
கொழும்பு: இலங்கையில் நடந்த இசை நிகழ்ச்சியில் தமன்னா உள்ளிட்ட நடிகைகளைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு வந்த இளசுகளால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கே பல பெண்கள் மயங்கி விழுந்த நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எப்போதும் இசை நிகழ்ச்சிகளுக்குத் தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கவே செய்வார்கள். நாம் 100 முறை கேட்ட பாடல் தான் என்றாலும் அத்தனை ஆயிரம் பேருடன் நேரடியாக அந்த பாடலை கேட்பது தனி உற்சாகத்தையே தரும்.

அத்துடன் நமக்குப் பிடித்த பிரபலங்களையும் நேரில் பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் வரவேற்பு எப்போதும் இசை நிகழ்ச்சிகளுக்கு அதிகமாகவே இருக்கும். ஆனால், பல ஆயிரம் பேர் ஒன்று கூடுவதால் இந்த இசை நிகழ்ச்சிகளை முறையாகத் திட்டமிட வேண்டும். இல்லையென்றால் மோசமான சம்பவங்கள் நடக்கக்கூடும்.
குழப்பம்: அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் தமன்னா உள்ளிட்ட நடிகைகள் டான்ஸ் ஆட.. அவர்களைக் காண இளசுகள் ஆர்வ மிகுதியில் மேடையை நோக்கித் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எவ்வளவோ முயன்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இலங்கையில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகத் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டது. அத்துடன் நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக 500 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை பல விலைகளில் டிக்கெட் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இது தவிரக் கலை விழாவுக்கு வரும் நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுக்கவும் தனியாகக் கட்டணத்தை வசூலித்துள்ளனர்.

பல ஆயிரம பேர்: தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டதால் பலரும் டிக்கெட் வாங்கினர். திறந்த வெளியில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியைக் காணப் பல ஆயிரம் பேர் திரண்டனர். யாழ்ப்பாணம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பல மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் ஸ்மூத்தாகவே நிகழ்ச்சி சென்று கொண்டு இருந்தது.
இருப்பினும், ஒரு கட்டத்தில் ரச்சிதா உள்ளிட்ட நடிகைகள் நடனமாக ஆரம்பித்த போது பலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு நகரத் தொடங்கினர். உற்சாக மிகுதியால் அவர்கள் மேடையை நோக்கி வர ஆரம்பித்தனர். அடுத்து தமன்னா டான்ஸ் இருந்தது. அடடா மழைடா பாடலுக்கு அவர் நடனமாட அங்குக் கூட இருந்த இளசுகள் வைப் செய்தனர். பாடல் முடிந்ததும் தமன்னா மேடையில் கேட் வாக் செய்ய அவரை அருகே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் முண்டியடித்துள்ளனர்.
என்ன நடந்தது: இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போதே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதைக் கவனித்து இருக்கலாம். ஆனால், இதைக் கவனிக்காமல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய போது நிலைமை மோசமானது. பல நூறு பேர் ஒரே நேரத்தில் மேடையை நோக்கி நகரத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் போலீசாரின் தடையை எல்லாம் அவர்கள் மதிக்கவில்லை.
அங்கே போடப்பட்ட தடுப்புகளும் கூட உடைக்கப்பட்டதால் போலீசாராலும் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.. அதன் பின்னரே நிலைமை உணர்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், அதற்குப் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு நட்சத்திரங்களே வந்து கூட பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பயன் இல்லை: ஒரு கட்டத்தில் நடிகை ரம்பா, "கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. சொல்வதை தயவு செய்து கேளுங்கள்.. ஏன் இப்படி செய்கிறீர்கள்.. உங்களை நம்பி தானே வந்தோம்.." என்று கோரிக்கை விடுத்தார். இருப்பினும், எதற்கும் பயன் இல்லை. அங்கே கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பெண்கள் பலரும் மயங்கி விழுந்தனர். அவர்களை உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து போலீசார் மீட்டனர். இருப்பினும், இதில் பலர் காயமடைந்ததால் இசை நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications