"மிஸ்ஸான கடிதம்".. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவில்லையா? வங்கதேச அதிபரால் பரபரப்பு
டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த ஆவணம் எதுவும் இல்லை என்று அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யாமல் அந்த பதவியில் தொடர்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கதேம் தனி நாடாக உருவாக பாகிஸ்தானிடம் போர் புரிந்து உயிர் துறந்தவர்களை தியாகிகள் எனக்கூறி அவர்களின் வாரிசுகளுக்கு அந்த நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராக சமீபத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டம் என்பது வங்கதேச பிரமதர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. வங்கதேச பிரதமர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் சென்றனர். இதனால் உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தனது சகோதரி ரெஹானுவுடன் நம் நாட்டில் வந்து தஞ்சமடைந்தார்.
இதையடுத்து வங்கதேச ராணுவம் சார்பில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அந்த நாட்டு அதிபர் மாளிகைக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. புதிதாக இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் தற்போது வங்கதேசத்தில் நிர்வாகம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிடும் தகவலை வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் வெளியிட்டுள்ளார். அதாவது ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் தன்னிடம் இல்லை என்று வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறியுள்ளார். இது தான் தற்போது வங்கதேசத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுபற்றி வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறியதாவது:
‛‛வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த அதிகாரப்பூர்வ ஆவண ஆதாரங்கள் என்னிடம் இல்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் ஷேக் ஹசீனா வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர் நேரில் வரவில்லை. இதுபற்றி ராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் முகமது அடில் சவுத்திரியிடம் அதை கவனிக்கச் சொன்னேன். அவருக்கும் எந்தத் தகவலும் இல்லை.
இதற்கிடையே தான் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர் வந்தபோது, பிரதமர் ராஜினாமா செய்தாரா என்பதை அறிய முயற்சித்தேன். ஆனால் ராஜினாமா செய்ததாக தகவல்தான் வந்ததே தவிர அதற்கான கடிதம் என்பது வரவில்லை.
அதன்பிறகு அமைச்சரவைச் செயலர் கடிதம் கேட்டு வந்தார். அனைத்து இடங்களிலும் தேடியும் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கடிதம் இல்லை என்று கூறினேன். ஆனால் ஷேக் ஹசீனா வெளிநாடு சென்றதால் சட்ட ஆலோசனைக்கு பிறகு இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது'' என்றார்.
இதனால் தற்போது வங்கதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடிதத்தை ஷேக் ஹசீனா வழங்கினாரா? அப்படி வழங்கி இருந்தால் அந்த கடிதம் யாரிடம் உள்ளது? ஒருவேளை ராஜினாமா கடிதம் வழங்காவிட்டால் அவர் இன்னும் பிரதமர் பதவியில் தொடர்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஒரு பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அவர் அப்பதவியில் நீடிப்பதாகவே பொருள்படும். இதனால் வங்கதேசத்தில் மீண்டும் குழப்பம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications