இம்ரான்கான் பிரதமராக நீடித்திருந்தால் இப்போது பாகிஸ்தானே இருந்திருக்காது.. சொல்றது யாருன்னு பாருங்க
அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே சவுதி அரேபியா இளவரசரை மோசமான கெட்ட வார்த்தையால் இம்ரான்கான் திட்டினார். இந்த விஷயம் அமைச்சர் ஒருவர் மூலம் சவுதி தூதரின் காதுக்கு சென்றுவிட்டது.
இஸ்லாமாபாத்: இம்ரான்கான் இன்னும் பிரதமர் பதவியில் அமர்ந்திருந்தால் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாமல் போயிருக்கும் என்று அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தலைமை தளபதி கமர் ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.
இம்ரான்கான் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதியாக இருந்த கமர் பஜ்வா, அவருக்கு தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சவுதி அரேபியாவின் இளவரசரை மோசமான கெட்ட வார்த்தைகளால் இம்ரான்கான் திட்டியதாகவும் பஜ்வா கூறியுள்ளார்.

ஆட்சியை இழந்த இம்ரான்
பாகிஸ்தானில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் ஆட்சியமைத்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றிருந்தார் இம்ரான்கான். பாகிஸ்தானை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுகிறேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சியமைத்த இம்ரான்கானால் அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க முடியவில்லை. போதாக்குறைக்கு, கொரோனாவும் உச்சமடைந்ததால் பாகிஸ்தான் பொருளாதாரம் முடங்கியது. பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு இம்ரான்கான் தான் காரணம் என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலக வலியுறுத்தின. பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான் கான் அரசு டிஸ்மிஸ் ஆனது.

ராணுவத்துடன் முரணான உறவு
பாகிஸ்தானை பொறுத்தவரை, ராணுவத்தின் துணை யாருக்கு இருக்கிறதோ அவர்களால் மட்டுமே ஆட்சியை சுமுகமாக நடத்த முடியும். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே ராணுவத்துடன் இணக்கமான உறவை இம்ரான்கான் வைத்துக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும், ராணுவத் தலைமை தளபதியாக இருந்த கமர் ஜாவித் பஜ்வா இம்ரான்கானுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நட்பை கொண்டிருந்ததால், சில ஆண்டுகள் அவரால் ஆட்சியை நடத்த முடிந்தது. மேலும், இம்ரான்கானுக்கு கமர் ஜாவித் உதவிக்கரம் நீட்டியிருந்தால் இம்ரான்கான் ஆட்சி நீடித்திருக்கும் எனவும் அப்போது கூறப்பட்டது.

"பாகிஸ்தானுக்கே ஆபத்து"
இந்நிலையில், ராணுவத் தலைமை தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட கமர் ஜாவித் பஜ்வா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறுகையில், "பிரதமருக்கான எந்த தகுதியும் இல்லாதவர் இம்ரான்கான். அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி நாட்டுக்கே பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இம்ரான்கான் மட்டும் பிரதமராக தற்போது வரை இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருந்திருக்காது. பாகிஸ்தானே அழிந்திருக்கும்.

"கெட்ட வார்த்தையில் திட்டினார்"
ஒரு நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் சில அடிப்படையான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். பொதுவெளியில் மற்ற நாடுகளின் தலைவர்களை பற்றி பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இவை எதுவும் இம்ரான்கானிடம் கிடையாது. ஒருமுறை, அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே, சவுதி அரேபியா இளவரசரை மோசமான கெட்ட வார்த்தையால் இம்ரான்கான் திட்டினார். இந்த விஷயம் அவரது அமைச்சர்களில் ஒருவர் மூலம் சவுதி தூதரின் காதுக்கு சென்றுவிட்டது. இதனால் பாகிஸ்தான் - சவுதி உறவில் பெரும் விரிசல் உருவானது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications