நிலைமை கைமீறுகிறது! இந்திய தூதர்களை கண்காணிக்கும் கனடா.. தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு? பகீர்
ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மிக மோசமான உறவு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பதாகவும் அவர்களின் தொலைப்பேசி உரையாடல்களையும் அரசு கண்காணிப்பதாகவும் மத்திய அரசு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா கனடா இடையேயான உறவு கடந்த சில மாதங்களில் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இந்தச் சூழலில் கனடா மீது மத்திய அரசு பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அதாவது கனடாவில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்களைக் கனடா அரசு சட்டவிரோதமாகக் கண்காணிப்பதாகவும் அவர்கள் துன்புறுத்துவதாகவும் மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
பின்னணி என்ன: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து கனடா நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறிய சர்ச்சை கருத்துக்குக் கடுமையான முறையில் எதிர்வினையாற்றப்பட்டதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற அபத்தமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்பது இருதரப்பு உறவுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
முன்னதாக கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது நடத்தப்படும் சதித் திட்டத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசைச் சேர்ந்த டாப் நபர் ஒருவர் இருப்பதாகக் கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருந்தார். இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கே இந்தியா கடுமையான எதிர்வினையாற்றி உள்ளது.
வெளியுறவுத் துறை: இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மேலும் கூறுகையில், "கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை அந்நாட்டு அரசு கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளது. இதுபோல நமது அதிகாரிகளைத் தொடர்ந்து துன்புறுத்தும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
ஏற்க முடியாது: எங்கள் தூதரக அதிகாரிகளைக் கனடா அரசு கண்காணித்து வருகிறது. அவர்களின் தொலைப்பேசி பேச்சுகளையும் இடைமறித்துக் கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற நிலைமை இருந்தால் தூதரக உறவுகளைச் சீர் செய்வது கடினம். தொழில்நுட்ப காரணங்களைச் சொல்லி கனடா அரசு துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. எங்களுடைய தூதரகப் பணியாளர்கள் ஏற்கனவே அங்குத் தீவிரவாதம் மற்றும் வன்முறைச் சூழலில் பணி செய்து வருகிறார்கள். இந்தச் சூழலில் கனடா அரசும் இதுபோல செயல்படுவதை ஏற்க முடியாது" என்றார்.
இந்தியா- கனடா உறவு: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நல்லுறவு தான் இருந்தது. ஆனால், கடந்தாண்டு கனடாவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கடந்தாண்டு இறுதியில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதாரம் எதுவும் இல்லாமல் சொன்னதே இரு நாட்டு உறவை மோசமாக்கியது. இந்தக் குற்றச்சாட்டிற்கு இந்தியா ஆதாரம் கேட்கிறது. ஆனால், ஆதாரத்தைத் தராமல் வெறுமென குற்றஞ்சாட்டுவதை மட்டும் கனடா தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் கனடா மேலும் ஒரு பரபர குற்றச்சாட்டை வைத்தது. அதாவது, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்களில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று மீண்டும் ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதைத் தொடர்ந்தே கனடாவில் உள்ள உயர் தூதர்களை இந்தியா வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications