ரஷ்யா நினைத்தே பார்க்காத விஷயம்.. பிடியை இறுக்கிய அமெரிக்கா.. ட்விஸ்ட் தரும் இந்தியா, சீனா
மாஸ்கோ: ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் கச்சா எண்ணெய் காப்பீட்டாளர்களுக்கு அமெரிக்கா கடுமையான தடைகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா மற்றும் சீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் பிற நாடுகளை நாட தொடங்கி உள்ளன. அமெரிக்காவின் தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக அளவில் விநியோகித்து வந்த 180 கப்பல்கள், டஜன் கணக்கான வர்த்தகர்கள், இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. உலகின் பல்வேறு வளங்களை கொண்ட ரஷ்யா அமெரிக்காவை சுத்தமாக மதிப்பதே இல்லை. அமெரிக்காவின் செயல்களை எதிர்க்கும் நாடாக இன்று வரை ரஷ்யா இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மீது நடத்தும் போர் காரணமாக, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டு எண்ணெய்யை வாங்கக்கூடாது என்று உலக நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனாலும் உலக நாடுகளும் ரஷ்யாவிடம் வாங்கி கொண்டு தான் இருந்தன.

ஏனெனில் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் தொழில் உலகின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக உள்ளது. ரஷ்யா மிகப்பெரிய அளவில் எண்ணெய் வளங்களை கொண்டுள்ளது . உலகிலேயே ஆறாவது பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடாக ரஷ்யா இருக்கிறது. ரஷ்யா உலகின் 12% கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வந்தது. இந்நிலையில் அமெரிக்கா விதித்த தடை காரணமாக ரஷ்யா குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு வழங்கி வந்தது.
இந்த சூழலில் அமெரிக்கா அரசு திடீரென கடுமையான கட்டுப்பாட்டினை விதித்துள்ளது. அமெரிக்காவின் தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக அளவில் விநியோகித்து வந்த 180 கப்பல்கள், டஜன் கணக்கான வர்த்தகர்கள், இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சில உயர் ரஷ்ய எண்ணெய் நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 3.50 டாலர் அதிகரித்து 80.42 டாலருக்கு உயர்ந்துள்ளது. அக்டோபர் 7 க்குப் பிறகு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 80 டாலரை அண்மையில் எட்டியுள்ளது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் 4.8 சதவிகிதம் % உயர்ந்து $77.49 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த சூழலில் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக, எண்ணெய் இருப்பு குறைவாக இருக்கும் நேரத்தில் (குளிர்காலத்தில் குறைக்கப்படும்), அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக மேலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. தற்போதைய நிலையில் தினசரி 1.5 மில்லியன் பீப்பாய்கள் (உலகளாவிய தேவையில் 1.4%) கொண்ட ரஷ்ய கச்சா எண்ணெய் பெரும்பாலும் ஐரோப்பாவிற்கு பதில் ஆசியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
தற்போது சீனாவின், யூலாங் பெட்ரோ கெமிக்கல் மற்றும் யூனிபெக் போன்ற சீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் அபுதாபி, அங்கோலா, பிரேசில் மற்றும் கனடாவிலிருந்து எண்ணெயை வாங்கியுள்ளன. அதேநேரம் ரஷ்யாவின் கடல்வழி எண்ணெயில் 60% க்கும் அதிகமானவற்றைப் பெற்று வந்த இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், தற்போது தற்காலிகமாக பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டன. இந்நிலையில் ஏற்றுமதிகளைத் தக்கவைக்க ரஷ்யா மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாற்று கச்சா எண்ணெய் ஆதாரங்களுக்காக ஓமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளை நாட தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications