இந்தியா தான் முக்கியம்.. மோதலுக்கு நடுவே ஜி 7 மாநாட்டுக்கு மோடியை அழைத்தது ஏன்? கனடா பிரதமர் ‛நச்'
ஒட்டாவா: நம் நாட்டுக்கும், கனடாவுக்கும் இடையே பெரும் பிரச்சனை நீடித்து வருகிறது. இதற்கிடையே தான் கனடா ஜி 7 உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி பேசினார். மோடியும் மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தான் மோதலுக்கு நடுவே இந்தியாவை அழைத்தது ஏன்? என்பது பற்றி கேள்விக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி தந்த விளக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜி 7 கூட்டமைப்பில் மொத்தம் 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இதில் இந்தியா இல்லை.

ஜி 7 கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜி 7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெற உள்ளது. ஜுன் 15ம் தேதி தொடங்கி 17 ம் தேதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் உறுப்பினர்களாக இல்லாத நாட்டின் தலைவர்களும் பங்கேற்பார்கள். அதாவது உறுப்பினர்களாக உள்ள அதேவேளையில் தலைமையேற்று நடத்தும் நாட்டின் தலைவரின் அழைப்பின்பேரில் இவர்கள் பங்கேற்பார்கள். அதன்படி கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளார்.
இந்த முறை கனடாவில் நடக்கும் பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும்
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு முன்கூட்டியே அழைப்பு சென்ற நிலையில் இந்தியாவுக்கு வரவில்லை. காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனை நம் நாடு மறுத்தது. இந்த விவகாரத்தில் இருநாடுகள் இடையே மோதல் உருவானது.
இந்த மோதல் காரணமாக பிரதமர் மோடியை கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியானது. ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மார்க் கார்னி ஆகியோர் லிபரல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இது உண்மை என்ற தகவலும் பரவ தொடங்கியது. இதற்கிடையே தான் திடீர் ட்விஸ்ட்டாக நேற்று கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைத்தார்.
இதனை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டார். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக மோடியும் உறுதியளித்துள்ளார். இதன்மூலம் மோடி ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் கனடா - இந்தியா இடையே மோதல் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஜி 7 உச்சி மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛ஜி 7 உச்சி மாநாட்டில் பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் துறையின் முன்னேற்றம், கனிம வளங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விவாதங்கள் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையேயான கூட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. அதேபோல் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது. இதனால் இந்த கூட்டத்தில் இந்தியாவின் இருப்பு அவசியம். மேலும் இந்தியா என்பது பல விநியோக சங்கிலிகளுக்கு மையமாக உள்ளது. இதனால் ஜி 7 மாநாட்டில் இந்தியாவின் இருப்பு என்பது மிகவும் முக்கியம். அதேபோல் கனடாவும், இந்தியாவும் சட்ட அமலாக்கம் தொடர்பாக பேச உள்ளோம். இதற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். இது இருநாடுகள் இடையேயான பிரச்சனைகளை தீர்த்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும்'' என்றார்.












Click it and Unblock the Notifications