பஹல்காமுக்கு பதில் பலுசிஸ்தான்.. SCO கூட்டறிக்கையில் அரசியல் செய்த சீனா+பாக்.! இந்தியா அதிரடி முடிவு
பெய்ஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டறிக்கையில் பஹல்காம் தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்ததால், இந்த அறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்திருக்கிறது. இதன் மூலம் சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கலாச்சார விஷயங்களில் ஒத்துழைக்க தயாராக இல்லை என்பதை இந்தியா தெளிவுப்படுத்தியுள்ளது.
சீனாவின் கிங்டாவோ நகரில் SCO அமைப்பின் கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகள் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தாக்குதலைப் பற்றி கூட்டு அறிக்கையில் எந்தவிதக் குறிப்பும் இல்லை. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் துணை அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்" பொறுப்பேற்றது. இந்தியா, இந்தத் தாக்குதலைக் கூட்டறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரியது. ஆனால், சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதைத் தவிர்த்துவிட்டன.
ஆனால், பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் பற்றி கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாதான் பலுசிஸ்தானில் தாக்குதல்களை தூண்டிவிடுகிறது என்பது பாகிஸ்தானின் நீண்ட கால குற்றச்சாட்டு. இப்படி இருக்கையில், அறிக்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமல் பலசிஸ்தான் பற்றி மட்டும் பேசியருந்தது இந்தியாவின் தேசிய நலன்களை பிரதிபலிப்பதாக இல்லை.
பயங்கரவாதத்திற்கு எதிராக "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அதற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதை இந்தியா தொடர்ந்து செய்து வருகிறது. எனவே இந்த கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை.
ராஜ்நாத் சிங், "பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டும். பயங்கரவாதிகள் பதுங்கும் மையங்கள் இனி பாதுகாப்பானவை அல்ல" என்றும் வெளிப்படையாகக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இந்தியா, கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்ததால், SCO கூட்டத்தின் முடிவில் எந்தவொரு "கூட்டுப் பிரகடனமும்" வெளியிடப்படவில்லை. இது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளதைக் காட்டுகிறது.
குறிப்பாக, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயங்கரவாதத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க முயற்சிக்கும்போது, சர்வதேச மன்றங்களில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டில் தனித்து நிற்கும் என்பதை இந்த முடிவு காட்டுகிறது.












Click it and Unblock the Notifications