உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தான் தீர்வு.. புதினிடம் மீண்டும் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி
மாஸ்கோ: பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொண்டார். தொடர்ந்து புதினை சந்தித்து பேசிய மோடி, "ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் நாங்கள் அனைத்து தரப்புடனும் தொடர்பில் உள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே மோதல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அமைதியான தீர்வு ஏற்படுவதற்கு உதவ இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது என்று கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் மாநாட்டி உச்சி மாநாடு ரஷ்யாவின் கசன் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கூறியதாவது:- மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் நாங்கள் அனைத்து தரப்புடனும் தொடர்பில் உள்ளோம்.
பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே மோதல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு ஆகும். அமைதியான தீர்வு ஏற்படுவதற்கு உதவ இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது. உங்களது வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கசன் நகருடன் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாக ஆழமான உறவு உள்ளது" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், "இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து ஆழமாக மேம்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் இருவரும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். எனது அழைப்பை ஏற்று ரஷ்யா வந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ரஷ்யாவும் இந்தியாவும் நீண்ட காலமாக நட்புறவுடன் உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மேற்கு நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தக உறவுகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தங்கள் நாட்டு மக்களுக்கு பலனளிக்கும் வகையிலான முடிவுகளையே இந்தியா எடுக்கும் என்று மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.












Click it and Unblock the Notifications