ஜாவா கடலுக்கு அடியில் தலைகீழாக கிடக்கும் ஏர் ஏசியா விமானம்
ஜகர்தா: விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடியில் தலைகீழாக கிடப்பது சோனார் கருவி மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சென்ற சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி துவங்கப்பட்டது.

இந்நிலையில் கடலில் 40 உடல்கள் மிதந்ததாகவும், அவை மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் 40 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை என்று தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் சிப்பந்தி உள்பட 6 பேரின் உடல்கள் தான் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. அந்த சிப்பந்தி 20 வயதாகும் ஹைருன்னிஸா ஹைதர் பவ்சி என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் உடல்களை மீட்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனார் கருவி எடுத்த படங்களில் ஏர் ஏசியா விமானம் கடலின் தரை மட்டத்தில் தலைகீழாக கிடப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications