இஸ்ரேலில் இறங்கி அடித்த ஈரான்? பற்றி எரியும் மொசாட்.. இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்கவே இல்லை!
டெல் அவிவ்: இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கி வரும் நிலையில், இஸ்ரேலின் இதயத்திலேயே ஈரான் அடித்துள்ளது. சரியாகக் குறிவைத்து ஈரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. ராணுவ தளங்கள் தொடங்கிப் பல முக்கிய உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேலின் இதயத்திலேயே இப்போது ஈரான் அடித்துள்ளது.

அதிர்ந்த மொசாட்
இஸ்ரேலைப் பொறுத்தவரை அதன் அரசியல் தலைமை, ராணுவ தலைமைக்கு இணையாக அதன் உளவுத் துறையும் முக்கியமானது. இஸ்ரேலின் உளவுத் துறையான மொசாட் அவர்களுக்கு மிகப் பெரிய சொத்தாகவே இருக்கிறது. எந்தவொரு வலிமையான நாடாக இருந்தாலும் உள்ளே புகுந்து உளவுத் தகவல்களைத் திரட்டுவதில் மொசாட்டை அடிச்சுக்கவே முடியாது. கடந்த காலங்களில் ஈரான் உட்படப் பல நாடுகளில் மொசாட் மிகப் பெரிய சீக்ரெட் ஆபரேஷன்களை மொசாட் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
மொசாட் மையம்
தனது எதிரிகள் குறித்து எல்லா தகவல்களையும் விரல் நுனியில் மொசாட் வைத்திருக்கும். இதற்கிடையே அந்த மொசாட்டின் கட்டிடத்தின் மீதே ஈரான் இப்போது தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே ஹெர்ஸ்லியாவில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டலிஜென்ஸ் அண்ட் ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் எனப்படும் மொசாட்டின் பயிற்சி மையத்தை ஈரான் தாக்கியுள்ளது. மொசாட் அலுவலகம் தீப்பிடித்து எரியும் காட்சிகளையும் ஈரான் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
அந்த வீடியோவில் ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிவதும் அதில் இருந்து அடர்த்தியான கரும்புகை எழுவதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் ஒருவர், "அவர்கள் மொசாட்டை தாக்கியுள்ளனர். இது மொசாட் கட்டிடம்" என்று சொல்வதும் கேட்கிறது. இது தொடர்பான போட்டோவை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் சொல்வது என்ன
இஸ்ரேலின் தேசிய அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் இது குறித்து விசாரிக்க உடனடியாக ஒரு குழுவை ஹெர்ஸ்லியாவுக்கு அனுப்பியுள்ளது. அதேநேரம் தாக்குதல் குறித்த தகவல்களை மறுத்தே இருக்கிறது. இது தொடர்பாகச் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "அங்கு சைரன் சத்தம் கேட்டது. இது குறித்து விசாரிக்க எங்கள் குழுவை உடனடியாக அனுப்பியுள்ளோம்" என்றார். ஈரானின் ஏவுகணைகள் ஹெர்ஸ்லியாவை தாக்கியதா என்ன என்பதை இஸ்ரேல் உறுதி செய்யவில்லை.
மற்றொரு பக்கம் இஸ்ரேலும் கூட கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி ஈரான் ராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் முதலில் தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு கடந்த 5 நாட்களாகவே ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதிகள், உயர்மட்ட அணு விஞ்ஞானிகளில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் பதிலடி
குறிப்பாக இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர்மட்ட ராணுவத் தளபதியுமான அலி ஷட்மானியை கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துல்லியமான உளவுத் தகவல் அடிப்படையில் தெஹ்ரானின் மையத்தில் உள்ள ஒரு கட்டளை மையத்தை இஸ்ரேல் தாக்கியது. அதில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும் ஈரானின் உயர்மட்ட தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷட்மானி கொல்லப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இப்போதைக்கு மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்த பதற்றத்தை உலக நாடுகள் உற்றுக் கவனித்தே வருகின்றன.












Click it and Unblock the Notifications