ஈரானிடம் அணுஆயுதம் இருக்கா? அமெரிக்கா கதிகலங்குவது ஏன்? ஐநா அணுஆயுத குழு தலைவர் போட்ட குண்டு
நியூயார்க்: ‛‛ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் பணியில் மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது. மோசமான அணுஆயுதம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை ஈரான் எட்டிவிட்டது'' என்று ஐநா சபையின் அணுஆயுதம் கண்காணிப்பு குழுவினர் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்து அமெரிக்காவை அலற வைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் என்பது நடந்து வருகிறது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அதிபரானது ஈரானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார்.

மேலும் ஈரானின் படைப்பிரிவில் வெளிநாட்டில் ஆபரேஷன்களை மேற்கொள்ளும் தளபதியை கொன்றார். இதனால் ஈரான் - டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட பகை உணர்வு உள்ளது. போதா குறைக்கு கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்பிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் அணுஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்று ஈரான் நம்புகிறது. ஏற்கனவே ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வென்றதும் அதற்கான நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிப்புக்காக யுரேனியம் செறிவூட்டல், யுரேனியம் தூய்மை பணியை ஈரான் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை டொனால்ட் டிரம்ப் விரும்பாத விலையில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ஈரான் - அமெரிக்கா இடையே முதற்கட்டமாக மஸ்கட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 2வது கட்டமாக இத்தாலி தலைநகர் ரோமில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் ஈரானிடம் அணுஆயுதம் உள்ளதா? அணுஆயுதம் தயாரிப்பில் ஈரான் எந்த நிலையில் உள்ளது? ஈரானை பார்த்து அமெரிக்கா பயப்படுவது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா சபை) அணுஆயுதம் கண்காணிப்பு குழுவின் தலைவர் ரஃபேல் க்ரோஸி முக்கிய தகவலை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: ‛‛ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் பணியில் மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது. அணுஆயுதம் தயாரிப்பதற்கான அனைத்தையும் அவர்கள் தனித்தனியாக தயாராக வைத்துள்ளனர். இன்னும் சில படிநிலைகள் மட்டுமே உள்ளது. விரைவில் அவர்கள் அதனை ஒன்றாக இணைத்தால் அணுஆயுதம் உருவாகி விடும். இதனால் ஈரான் அணுஆயுதத்தை கையில் ஏந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாட்டிடம் அணுஆயுதம் இல்லை என்று வாய்மொழியாக சொல்வதை நம்மால் நம்ப முடியாது. ஏனென்றால் அதனை நாம் சரிபார்க்க வேண்டும்'' என்றார்.
அதாவது ஈரானை பொறுத்தவரை கடந்த 2015ம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமா முன்னிலையில் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஈரான் தெரிவித்த நிலையில் அமெரிக்கா சில பொருளாதார தடைகளை நீக்கியது. ஆனால் 2017 முதல் 2021 வரை டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தார். அப்போது ஒபாமா போட்ட ஈரானுடனான ஒப்பந்தத்தை அவர் ரத்து செய்தார். அதோடு ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார்.
இதனால் ஈரான் அன்று முதல் அணுஆயுதம் தயாரிக்கும் பணியை தொடங்கியது. யுரேனியம் செறிவூட்டல், தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது. அணுஆயுதம் தயாரிக்க செறிவூட்டப்பட்ட யுரேனியம் 90 சதவீதம் தூய்மையாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை ஈரான் 60 சதவீதம் வரை தூய்மையான யுரேனியத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அதனை விட அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியத்தை ஈரான் வைத்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் ஈரான் அணுஆயுதத்தை முழுமையாக உற்பத்தி செய்துவிடும் என்று ஐநா அணுஆயுத கண்காணிப்பு குழுவின் தலைவர் ரஃபேல் க்ரோஸி கூறியுள்ளார்.
இது அமெரிக்காவுக்கான வார்னிங் மெசேஜாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. இப்படி அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே மோதல் என்பது இருந்தது. இதையடுத்து வடகொரியா அணுஆயுதம் தயாரித்தது. இப்போது அணுஆயுதத்தை வைத்து கொண்டு அமெரிக்காவை மிரட்டி வருகிறது. அதேபோல் ஈரானும் அணுஆயுதம் தயாரித்தால் அதனை வைத்து அமெரிக்காவை மிரட்டி பார்க்கும்.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரும் சக்தியாக ஈரான் உருமாறிவிடும். மேலும் அண்டை நாடாக உள்ள அமெரிக்காவின் தோழமை நாடான இஸ்ரேலையும் கதிகலங்க வைக்கும். ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பிரச்சனை என்பது உள்ளது. ஈரான் தனது ஆதரவு அமைப்புகள் மூலம் இஸ்ரேலை சீண்டி வருகிறது. இப்படியான சூழலில் ஈரானிடம் அணுஆயுதம் இருக்கும்பட்சத்தில் அது இஸ்ரேலுக்கும் பெரும் பிரச்சனையாக மாறும். இதனால் தான் டொனால்ட் டிரம்ப் எப்படியாவது அமெரிக்காவின் அணுஆயுத உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.











Click it and Unblock the Notifications