டிரம்ப் முதல் உத்தரவே உலகை அதிர வைக்கும்.. ஈரான் விவகாரத்தில் விபரீதம்! மாஜி சிஐஏ தலைவர் எச்சரிக்கை
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் கடந்த பல மாதங்களாகவே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே அதிபர் தேர்தலிலும் டிரம்ப் வென்றுவிடவே மத்திய கிழக்கில் மிகப் பெரிய போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அமைப்பின் முன்னாள் தலைவர் லியோன் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ளது சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் அவர் இஸ்ரேலுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்க மாட்டார் எனத் தெரிகிறது.

என்ன நடக்கும்: இதற்கிடையே முன்னாள் சிஐஏ இயக்குநரும் முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருமான லியோன் பனெட்டா அதிபர் தேர்தலில் வென்றுள்ள ட்ரம்ப் மத்திய கிழக்கில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து சில ஷாக் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு க்ரீன் லைட் தருவார் என்றும் இதனால் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் இடையே மிக பெரிய போர் வெடிக்கும் என்றும் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மத்திய கிழக்கைப் பொறுத்தவரை முழு வீச்சிலான தாக்குதலுக்கு நெதன்யாகுவுக்கு டிரம்ப் க்ரீன் லைட் தர போகிறார் என்றே நான் நினைக்கிறேன். மத்திய கிழக்கு விவகாரம் குறித்து டிரம்ப் தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அங்கு என்ன செய்தாலும், என்ன செய்ய விரும்பினாலும் எனது ஆசீர்வாதம் நிச்சயம் இருக்கும் என்று டிரம்ப் கூறியதை நான் நினைவுகூர விரும்புகிறேன்.
கேள்வி இதுதான்: எனவே, டிரம்ப் நிலைப்பாடு மாறப் போவதில்லை.. அதேநேரம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்ன செய்யப் போகிறார் என்பதே இங்கு முக்கியமான கேள்வி.. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா.. இல்லை ஈரான் மீது போர் தொடங்கப் போகிறாரா என்பதே முக்கியமான கேள்வி.
கடந்த காலங்களில் நான் அடிக்கடி குறிப்பிட்டது போல், நாம் இப்போது மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம். ரஷ்யா- உக்ரைன், சீனா - தைவான், மத்திய கிழக்கு, ஈரான், வட கொரியா என பல ஃப்ளாஷ் பாயின்ட்கள் உள்ளன. எந்தவொரு சிறு தாக்குதலும் கூட மிகப் பெரிய போருக்கு வித்திட்டும் ஆபத்து இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
நல்லுறவு: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்பிற்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவே இருந்து வருகிறது. மேலும், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் கூட டிரம்ப்பை தொடர்பு கொண்டு நெதன்யாகு பேசியிருந்தார். இந்தச் சூழலில் டிரம்ப் வென்றுள்ளது இஸ்ரேலுக்குச் சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது.
யார் இந்த லியோன்: ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரான லியோன் பனெட்டா கலிபோர்னியாவில் இருந்து 1977-1993 வரை எம்பியாக இருந்தவர்.. மேலும், பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது 1993-97 வரை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக இருந்தவர். மேலும், ஒபாமா காலத்தில் 2009- 2011 வரை சிஐஏ இயக்குநராகவும், 2011-13 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications