அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அடி.. இனி தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும்.. கமேனி கடும் வார்னிங்
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. போர் முடிவடைந்த பிறகு முதல் முறையாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இஸ்ரேல் - ஈரான் போர் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறை கொடுத்துள்ளோம். இனியும் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று வார்னிங் செய்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. 12 நாட்களாக நடந்த இந்த போரில் அமெரிக்காவும் என்ட்ரி கொடுத்தது. இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த வேளையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் திடீர் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா தனது போர் விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரானின் போர்டோ உள்பட 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்கியது. இந்த 3 இடங்களில் தான் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை செறிவூட்டியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலில் 3 அணுசக்தி நிலையங்களும் சேதமடைந்தது. இதையடுத்து ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான விமானப்படை தளத்தை தாக்கியது.
இதையடுத்து பதற்றம் அதிகரித்தது. இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து 12 நாள் போர் முடிவுக்கு வந்தது. இந்த போர் முடிவடைந்த பிறகு முதல் முறையாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி அந்த நாட்டின் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த வீடியோவில் வழக்கத்தை விட அயதுல்லா அலி கமேனி மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஆனாலும் அவர் அமெரிக்காவுக்கு வார்னிங் செய்தார். இதுதொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறியதாவது:
இந்த போரில் அமெரிக்கா தலையிடவில்லை என்றால் சியோனிச ஆட்சி(இஸ்ரேல் அரசு) முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் என்று நினைத்தது. இதனால் தான் அமெரிக்கா தலையீடு செய்தது. இருப்பினும் அமெரிக்கா இந்த போரில் தலையிட்டதில் அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. ஈரானின் இஸ்லாமிய குடியரசு தான் வெற்றி பெற்றது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது. ஈரான் தனது பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களுக்கு செல்லும் வழியை கொண்டுள்ளது. தேவைப்படும்போது அதன்மூலம் நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரலாம். ஏனென்றால் ஈரானில் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடந்தாலும், எதிரி நிச்சயமாக அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் - ஈரான் போர் நடந்த சமயத்தில் அயதுல்லா அலி கமேனி பதுங்கு குழிக்குள் குடும்பத்துடன் பதுங்கினார். மேலும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவர் தற்போது ‛எலைட்' பிரிவின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications