ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்.. கச்சா எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு
டெஹ்ரான்: ஈரானில் உள்ள 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களின் மீது இன்று அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூட நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது என்ன? இதனால் இந்தியா எப்படி பாதிக்கப்படும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலுக்குள் இன்று அமெரிக்கா நுழைந்தது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா இன்று அதிகாலையில் திடீரென்று தாக்குதல் நடத்தியது.

ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த இடங்களிலும் தான் ஈரான் தனது அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டி வருகிறது. இதனை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தான் ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஒப்புதல் ஈரான் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஈரான் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்க வேண்டி உள்ளது. அங்கு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு விடும்.
இதனால் நம் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு 40 சதவீதம் கச்சா எண்ணெய் வருகிறது. இந்த ஜலசந்தி மூடப்படும் பட்சத்தில் அந்த கச்சா எண்ணெய்கள் நமக்கு கிடைக்காது. இதனால் வேறு நாடுகளை அணுக வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயரும். அதன்பிறகு பிற பொருட்களின் விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஆங்கிலத்தில் Strait of Hormuz என்று அழைக்கப்படுகிறது. இது முக்கிய கடல் வழி நீர் வழிப்பாதையாகும். மத்திய கிழக்கில் இருந்து ஆசிய நாடுகளை இணைக்கும் நீர்வழித்தடமாக உள்ளது. இது மொத்தம் 21 மைல்கள் அதாவது 34 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இதன் வடக்கே ஈரானும், தெற்கே ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளன. பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா, அரபி கடலுடன் இணைக்கும் பகுதியாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது.
இதன் வழியாக தான் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வருகிறது. நம் நாட்டை எடுத்து கொண்டால் மொத்த கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். மே மாதத்தில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 47 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு வந்தது.
ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வரும் கச்சா எண்ணெய் நாம் வாங்கி வரும் நிலையில் அங்கிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் சரக்கு கப்பல்கள் வர வேண்டும். தற்போது அதனை ஈரான் மூடினால் ஈராக், அவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் கிடைக்காது.
அதேபோல் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கிடைக்காது. இதனால் டிமாண்ட் அதிகரிக்கும். ரஷ்யா உள்பட பிற நாடுகளை நாம் அணுக வேண்டியிருக்கும். அவர்கள் நமக்கு கச்சா எண்ணெய் விலையை உயர்த்தலாம். இது நேரடியாக பெட்ரோல் டீசல் விலையை அதிகரிக்கும். அதன்மூலம் பிற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications