உலக வர்த்தகத்தின் உயிர்நாடி.. ஹார்முஸ் ஜலசந்தி மூடல்! கப்பல்களை அழிப்போம் என ஈரான் மிரட்டல்
தெஹ்ரான்: உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த வழியாக எதாவது எண்ணெய் கப்பல்கள் வந்தால் அதைத் தாக்கி அழிக்கப் போவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 4வது நாளாகத் தொடர்கிறது. இரு தரப்புமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் அங்கு வரலாறு காணாத அளவுக்குப் பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இது தொடர்பான அறிவிப்பை ஹார்முஸ் ஜலசந்தி வெளியிட்டது. அதில் ஹர்முஸ் நீர் வழிப்பாதை வழியாக நுழைய முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்புடம் என ஈரான் படைகள் எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் நாட்டின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பாதையைத் தான் மூடுவதாக அறிவித்துள்ள ஈரான் படைகள், இந்த ஜலசந்தியை முடக்க ஈரான் படைகளைப் பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டவட்ட அறிவிப்பு
இது தொடர்பாக ஈரான் படைகளின் பிரிகேடியர் ஜெனரல் சர்தார் இப்ராஹிம் ஜபாரி கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இப்போது யாராவது அதைக் கடக்க முயன்றால், புரட்சிகர காவல் படை மற்றும் ஈரான் கடற்படையின் வீரர்கள் அந்தக் கப்பல்களைத் தீக்கிரையாக்குவார்கள்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. கமேனி கொலை மத்திய கிழக்கு முழுவதும் பதட்டத்தைக் கடுமையாக அதிகரித்தது. கமேனி மரணத்திற்குப் பதிலடியாக கத்தார், குவைத், பஹ்ரைன் போன்ற அமெரிக்கத் தளங்கள் உள்ள அண்டை நாடுகள் மீதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமன் மீதும் ஈரான் தொடர்ச்சியாகப் பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.
அதென்ன ஹார்முஸ் ஜலசந்தி?
வடக்கில் ஈரானுக்கும் தெற்கில் ஓமானுக்கும் இடையில் தான் ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர் வழிப்பாதை. சுமார் 33 கிலோமீட்டர் (21 மைல்) அகலமுள்ள இதன் குறுகிய பகுதி வழியாகவே உலகின் தினசரி எண்ணெய் நுகர்வில் சுமார் 20% செல்கிறது. உலக அளவில் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி ரூட்டாக விளங்கும் இதன் வழியாக அனுப்பப்படும் பெரும்பாலான எண்ணெய் ஆசிய சந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாகச் சீனாவுக்குச் செல்கிறது.
ஹார்முஸ் மீதான அச்சுறுத்தல் உலக எரிசக்தி சந்தைகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரூட்டில் இடையூறுகள் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா மறுப்பு
அதேநேரம் ஈரான் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டாலும் கூட ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப்படை தெரிவித்தது. முக்கியமான எண்ணெய் கப்பல் வழி மூடப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் கூறும் சொல்வதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும், கடந்த காலங்களிலும் பல முறை ஈரான் இந்த வழித்தடத்தை மூடுவதாக முன்னரும் அச்சுறுத்தியுள்ளது. ஆனால், இந்த பாதை ஒரு போதும் முழுமையாக மூடப்பட்டதே இல்லை. 1980களில் நடந்த டேங்கர் போருக்கு பிறகு இந்த பாதை இதுவரை முழுமையாக மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications