கியாஸ் தட்டுப்பாடு வந்திடுச்சி.. இந்தியாவுக்குபுது தலைவலி.. ஈரானால் கைவிரித்த கத்தார்! சிக்கல்
டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் போரை தொடங்கி ஈரானை சரமாரியாக தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கிறது. ஈரான் தாக்குதலால் கத்தார் எல்என்ஜி கியாஸ் உற்பத்தியை நிறுத்தி உள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கான எல்என்ஜி எனும் கியாஸ் சப்ளையை இந்திய நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளன. இதனால் நம் நாடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் போரை தொடங்கி உள்ளன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் ராணுவ முகாம், விமானப்படை தளம், கடற்படை தளத்தை தாக்கி வருகிறது.

அந்த வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் - உதைத் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கத்தார் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
எல்என்ஜி கியாஸ்
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக கத்தார் எல்என்ஜி எனும் திரவ இயற்கைஎரிவாயு (LNG or Liquefied Natural gas) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. நம் நாட்டுக்கு கத்தாரில் இருந்து தான் எல்என்ஜி கியாஸ் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நம் நாடு பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது.
எங்கிருந்து வருகிறது?
அதாவது உலகளவில் எல்என்ஜி இறக்குமதியில் 4வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கத்தார் உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் நம் நாடு எல்என்ஜி கியாஸை வாங்கி வருகிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திடம் (ADNOC) இருந்து நம் நாடு அதிகளவில் எல்என்ஜி வாங்கி வருகிறது. இதற்கு அடுத்ததாக கத்தாரி எல்என்ஜியிடம் இருந்து எல்என்ஜி வாங்கி வருகிறது.
தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு
இங்கிருந்து வாங்கும் எல்என்ஜி கியாஸ்கள் மத்திய அரசின் பெட்ரோனெட் எல்என்ஜி (PETONET LNG), கெயில் (GAIL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் நாடு முழுவதும் வழங்கி வருகிறது. தற்போது கத்தார் எல்என்ஜி கியாஸ் உற்பத்தியை நிறுத்தி உள்ளதால் நம் நாட்டில் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது.
இதனை சரிசெய்ய இந்திய நிறுவனங்கள் தொழில்துறைக்கான எல்என்ஜி கியாஸ் விநியோகத்தை குறைத்துள்ளது. இதுதொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 டூ 30 சதவீதம் வரை
அதன்படி பார்த்தால் முதற்கட்டமாக தொழில் நிறுவனங்களுக்கான எல்என்ஜி கியாஸ் சப்ளை 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பிரச்சனையை சமாளிக்க உடனடியாக பெட்ரோனெட் எல்என்ஜி, கெயில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் புதிய டெண்டர்களை வெளியிட உள்ளன.
இருப்பினும் தற்போதைய போர் சூழல், போக்குவரத்தில் உள்ள சவால் உள்ளிட்டவற்றில் இருக்கும் சவால்கள், சரக்கு - காப்பீட்டு செலவுகள் உள்ளிட்டவை பெரும் பிரச்சனையாக உள்ளன.
சீனாவுக்கும் பாதிப்பு
இந்தியாவை போல் சீனாவும் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குவதல் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதை வழியாக தான் உலகில் 20 சதவீதம் கச்சா எண்ணெய்கள் கொண்டு செல்லப்படும். தற்போது இந்த பாதையில் கப்பல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஈராக், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எல்என்ஜி கியாஸ், கச்சா எண்ணெய் சப்ளை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவை எடுத்து கொண்டால் தனது கச்சா எண்ணெயில் பாதியை மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் வாங்குகிறது. இதனால் சீனாவுக்கான கச்சா எண்ணெய் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டு எல்என்ஜி கியாஸ் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது போல் சீனாவும் கச்சா எண்ணெய் கிடைக்காமல் சிக்கலில் சிக்கும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications