ஈரான் கோரதாண்டவம்.. கடலில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்.. 14 இந்தியர்களின் கதி என்ன? உச்சமடைந்த போர்
டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை கடுமையாக தாக்கி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் ஓமன் கடற்கரை அருகே ஈரானுக்கு சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பலை ஈரான் திடீரென்று தாக்கி உள்ளது. இந்த கப்பல் கடலில் தீப்பற்றி எரிகிறது. அதில் 14 இந்தியர்கள் உள்பட 20 சிப்பந்திகள் பயணித்த நிலையில் அவர்களின் கதி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஈரான் போர் உச்சக்கட்ட பதற்றத்தை எட்டியுள்ளது.

ஈரானை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பந்தாடி வருகின்றன. ஈரானுக்கு எதிராக நேற்று தொடங்கிய போர் இன்று 2வது நாளும் தொடர்கிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் இருந்து போர் விமானம் மூலமாகவும், ஏவுகணைகளை பயன்படுத்தியும் ஈரானை தாக்கி வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஈரானையொட்டி ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Harmuz ) உள்ளது. இது ஈரானுக்கு சொந்தமான பகுதியாகும்.
இந்த ஹார்முஸ் ஜலசந்தி உலகளவில் மிகவும் முக்கியமான இடமாகும். கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கான கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும். புரியும் படி கூற வேண்டும் உலகில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடைபெறுகிறது.
இதற்கிடையே தான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக நேற்று ஈரான் அறிவித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து போரை தொடங்கிய நிலையில் நேற்று இரவு இந்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த அபாயத்துக்கு நடுவே தான் தற்போது இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் இன்று ஹார்முஸ் ஜலசந்தியின் அருகே ஓமன் வளைகுடா பகுதியில் முசண்டம் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை அருகே எண்ணெய் கப்பல் இருந்த நிலையில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 20 சிப்பந்திகள் பயணித்துள்ளனர். இதில் 15 பேர் இந்தியர்கள். 5 பேர் ஈரானை சேர்ந்தவர்கள். அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை.
இந்த எண்ணெய் கப்பலில் பலாவு நாட்டின் கொடி உள்ளது. பலாவு என்பது தீவு நாடாகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியா என்ற பகுதியில் இந்த நாடு அமைந்துள்ளது. ஈரான் சார்பில் பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜோர்டான்,
உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்ந்த முகாம், விமானப்படை, கடற்படை தளத்தை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஓமனின் டுகும் துறைமுகத்திலும் ஈரான் சார்பில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஓமன் என்பது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகும். அதுமட்டுமின்றி இந்த போருக்கு காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையில் ஈரான் - அமெரிக்கா இடையே ஓமன் தான் மத்தியஸ்தம் செய்து 3 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தான் அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி நடத்தி வருகிறது.
இப்படியான சூழலில் தான் ஈரான், ஓமனையும் குறிவைத்து தாக்கி வருகிறது. ஏற்கனவே ஓமன் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது எண்ணெய் கப்பல் தீக்கிரையாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் என்பது உச்சமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications