போர் தொடங்கியது? இஸ்ரேல் மீது பதிலடியை ஆரம்பித்த ஈரான்.. உற்று கவனிக்கும் அமெரிக்கா! பெரும் பதற்றம்
தெஹ்ரான்: இன்று திடீரென ஈரான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானின் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் சுமார் 100+ டிரோன்கள் மூலம் ஈரானும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தான் போர் வெடித்தது. பிறகு ஹிஸ்புல்லா, சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் எனப் போர் தொடர்ந்தே வந்தது. இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது.

இஸ்ரேல் தாக்குதல்
இந்தச் சூழலில் இன்று திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. ஈரானின் முக்கியமான நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தலாம் எனக் கடந்த சில நாட்களாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் பதிலடி
இதற்கிடையே இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி சுமார் 100+ ஆளில்லா விமானங்களை ஈரான் ஏவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலும் உறுதி செய்துள்ள நிலையில், அவற்றைச் சுட்டு வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் கூறுகையில், "இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஈரான் ஏவியுள்ளது, .. அவற்றை இடைமறித்து அழிக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மேலும் ஈரானின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200 போர் விமானங்கள் ஈடுபட்டன. அவை ஈரான் முழுவதும் சுமார் 100 இலக்குகளைத் தாக்கின" என்றார்.
லிமிட் இருக்காது
இஸ்ரேல் முதலில் நடத்திய இந்த தாக்குதல் ஈரானைக் கொந்தளிக்க வைத்துள்ளது. எந்தவொரு லிமிட்டும் இல்லாமல் தீவிரமான பதிலடியைக் கொடுக்கப் போவதாக ஈரான் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஈரான் ராணுவ அதிகாரி கூறுகையில், "அல்-குத்ஸை (ஜெருசலேம்) ஆக்கிரமித்துள்ள பயங்கரவாத ஆட்சி அனைத்து சிவப்புக் கோடுகளையும் மீறிவிட்டது. இனி அவர்களின் குற்றங்களுக்குப் பதிலடி கொடுப்பதில் எந்தவொரு லிமிட்டும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய தலைவர்களை இழந்த ஈரான்
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பலத்த பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே ஈரான் எச்சரித்திருந்தது. ஏனென்றால் இஸ்ரேல் ஈரானில் நடத்திய தாக்குதலில் இரண்டு மூத்த இராணுவ தளபதிகள் மற்றும் உயர்மட்ட அணு விஞ்ஞானிகளை ஈரான் இழந்திருந்தது. இதனால் இதற்கு இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியிருந்தார். தாக்குதல் மூலம் இஸ்ரேல் தனக்கான தலைவிதியை எழுதிக் கொண்டதாகவும் அது மிக மோசமான சேதத்தைச் சந்திக்கப்போவது உறுதி என கமேனி கூறியிருந்தார்.
உயிரிழப்பு
ஈரானில் உள்ள பல இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஆயுதப் படைகளின் தளபதி முகமது பாகேரி மற்றும் மூத்த தளபதி கோலாம் அலி ரஷித் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அணு விஞ்ஞானிகளான முகமது மெஹ்தி டெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடூன் அப்பாசி ஆகியோரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் ஈரான் என மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடியாக போர் வெடித்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications