பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்த ஐரோப்பிய நாடுகள்! வரலாற்று தருணம் என தலைவர்கள் பெருமை!
டப்ளின்: ஐநாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்குவதற்கான வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை மே 28 முதல் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
கடந்த 1988ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் தொடர்பான குரல்கள் தீவிரமாக எழுந்து வருகின்றன. இந்த ஆண்டில்தான் பாலஸ்தீன விடுதலை அமைப்பு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஜெருசலேம் தலைநகர் என்று அறிவிக்கப்பட்டாலும் அதன் எல்லைகளை குறிப்பிடவில்லை. தற்போது மேற்குக் கரையின் சில பகுதிகளில் பாலஸ்தீனிய அதிகாரம் (PA) மூலம் வரையறுக்கப்பட்ட சுய-அரசாங்கத்தைக் கொண்டுள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கவில்லை. மட்டுமல்லாது மேற்குக் கரை மற்றும் காசாவில் பாலஸ்தீன அரசை உருவாக்குவதையும் இஸ்ரேல் எதிர்க்கிறது. அத்தகைய அரசு தங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று வாதிடுகிறது. இஸ்ரேலுடன் அமெரிக்கா நட்புறவு கொண்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள்தான் தீர்வு என்று அது கருதுகிறது. ஆனால் அத்தகைய அரசு இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே வர வேண்டும் என்றும் அமெரிக்கா கூறுகிறது.
இப்படி இருக்கையில்தான் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை மே 28 முதல் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலஸ்தீன அரசு, இது ஒரு வரலாற்று தருணம் என்று தெரிவித்திருக்கிறது.
“பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (பிஎல்ஓ) நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் ஹுசைன் அல்-ஷேக் கூறுகையில், “பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது அமைதிக்கான பாதையாகும். இது ஒரு வரலாற்று தருணம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு மே 10ம் தேதி தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் அன்றைய தினம் கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்துள்ளன. எனவே அதிக பெரும்பான்மை ஆதரவு பெற்று ஐக்கிய நாடுகள் சபையில், பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்கும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications