இந்தியாவுக்கு ஸ்கெட்ச்? கைகோர்த்த சீனா + பாகிஸ்தான் + வங்கதேசம்.. செய்த செயலை பாருங்க
டாக்கா: சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தின் ஒரு பகுதியாக சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் பிரதிநிதிகள் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவை புறக்கணித்து 3 நாடுகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது நம் நாட்டுக்கு சிக்கலை உருவாக்கும்.
சீனாவின் குன்மிங் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் நம் நாட்டின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதேபோல் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக சீனா - பாகிஸ்தான் - வங்கதேசம் பிரதிநிதிகள் தனியாக சந்தித்து பேசினர். இந்த 3 நாடுகளும் நம் நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதோடு, மோதலை கடைப்பிடித்து வருகின்றன.
இதனால் பாகிஸ்தான் - சீனா - வங்கதேசம் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்குகிறது. இந்த கூட்டணி இந்தியாை குறிவைத்து அமைக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது நம் நாட்டுக்கு பிரச்சனையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் சீனா - பாகிஸ்தான் - வங்கதேச பிரதிநிதிகளின் மீட்டிங் பற்றி வங்கதேச இடைக்கால அரசு விளக்கம் அளித்துள்ளது. வங்கதேசம் சார்பில் புதிய கூட்டணி அமைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், "வங்கதேசம், பாகிஸ்தான், சீனா இணைந்து எந்த கூட்டணியையும் அமைக்கவில்லை. இந்த மீட்டிங் அலுவல் ரீதியானது மட்டுமே. இது அரசியல் ரீதியானது அல்ல. புதிய கூட்டணி அமைப்பது பற்றி எந்த நோக்கமும் இல்லை. நாங்கள் எந்த கூட்டணியும் அமைக்கவில்லை. அதற்கான எண்ணமும் இல்லை. அதேபோல் இந்த மீட்டிங் இன்னொரு நாட்டை குறிவைக்கவில்லை’’ என்றார்.
முன்னதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‛‛வங்கதேசம், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குன்மிங்கில் நடைபெற்ற இரண்டு பிராந்திய நிகழ்வுகளான "சீனா-தெற்கு ஆசியா கண்காட்சி" மற்றும் "சீனா-தெற்கு ஆசியா ஒத்துழைப்பு மன்றம்" ஆகியவற்றின் இடையே ஒரு "முறைசாரா முத்தரப்பு கூட்டத்தை" நடத்தின’’ என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் ‛‛இந்த கூட்டத்தில் மூன்று நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான நல்ல உறவு, பரஸ்பர நம்பிக்கை, சமத்துவம், வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் சீனா மற்றும் பாகிஸ்தான் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டன. பாகிஸ்தான் சார்பில் வெளியான அறிக்கையில், ‛‛வங்கதேசம்-சீனா-பாகிஸ்தான் முத்தரப்பு வழிமுறையின் தொடக்க கூட்டம் இது. 3 நாடுகள் இடையே கூட்டு பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டு இருந்தது. இருப்பினும் கூட சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை தற்போது நம் நாட்டுக்கு எதிர் நிலைப்பாட்டுடன் உள்ளதால் இந்த மீட்டிங் என்பது நம் நாட்டுக்கு சிக்கலாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications