சன்னி VS ஷியா.. பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்.. ஷாக் காரணம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 31 பேர் பலியான நிலையில் 169 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் தாக்குதலின் பின்னணியில் உள்ள ஷியா - சன்னி இஸ்லாமியர்கள் பிரச்சனை குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ள ஷெஹ்சாத் டவுன் பகுதியில் தெர்லாய் இமாம்பர்கா என்ற மசூதி அமைந்துள்ளது. இது ஷியா இஸ்லாமியர்களுக்கான மசூதியாகும். இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை மிகவும் முக்கியமானது.
இந்நிலையில் தான் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான இஸ்லாமியர்கள் மசூதியில் தொழுகைக்காக கூடினர். அப்போது திடீரென்று மசூதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
31 பேர் பலி
இதில் 31 பேர் பலியாகி உள்ளனர். 160க்கும் அதிகமானர்வர்கள் காயமடைந்துள்ளனர். பலரும் கை, கால்களை இழந்துள்ளனர். இவர்களுக்கு அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலை படை தாக்குதல் என்பது உறுதியானது. மசூதியின் நுழைவு வாயிலில் நின்ற ஒருவர் தன்னை தற்கொலை படையாக மாற்றி உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு
இருப்பினும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருந்தன. கடைசியாக ஐஎஸ்ஐஎஸ் எனும் பயங்கரவாத அமைப்பு குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. இதனை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் ஜிஹாதி குழுக்களைக் கண்காணிக்கும் சைட் இன்டலிஜென்ஸ் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛இஸ்லாமாபாத்தின் புறநகர் பகுதியான தர்லாயில் உள்ள இமாம் பர்கா காஸ்ர்-இ-காதிஜதுல் குப்ரா மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. 2008ல் 60 பேர் கொல்லப்பட்ட மாரியட் ஹோட்டல் குண்டுவெடிப்பிற்கு பிறகு தலைநகரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
ஷியா இஸ்லாமியர்கள்
இந்த தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தி உள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு வந்த நபர் மசூதி வாயிலை அடைந்தார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் வேறு வழியின்றி நுழைவு வாயிலேயே நின்று தற்கொலை படை தாக்குதல் நடத்தினார். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகமாக கூடியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை?
பாகிஸ்தான் சன்னி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஷியா இஸ்லாமியர்கள் குறைவாக உள்ளனர். பாகிஸ்தான் மக்கள்தொகையில் 85 முதல் 90 சதவீதம் பேர் சன்னி இஸ்லாமியர்களாகவும், 10 முதல் 15 சதவீதம் வரை ஷியா இஸ்லாமியர்களாக உள்ளனர். ஷியா இஸ்லாமியர்கள் குறிவைத்து பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர், ஷியா இஸ்லாமியர்களை எதிரியாக பார்த்து வருகின்றனர். ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் சன்னி இஸ்லாமியர்களுக்கும், ஷியா இஸ்லாமியர்களுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் பணியை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மத வழிபாடு அடிப்படையில் வெறியை தூண்டுகிறது.
ஷியாவை குறி வைப்பது ஏன்?
தங்களின் நம்பிக்கைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் என்று ஷியா இஸ்லாமியர்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கருதுகிறது. மேலும் பாகிஸ்தான் உள்பட மத்திய கிழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தங்களின் செல்வாக்கை விரிவுப்படுத்த விரும்புகின்றனர். இதற்கு ஷியா இஸ்லாமியர்கள் தடையாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
இதனால் ஷியா இஸ்லாமியர்களை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பல முறை தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஷியா இஸ்லாமியர்களின் அடையாளத்தை ஒழிக்க வேண்டும். அவர்களின் வழிப்பாட்டு தலங்களை அழிக்க வேண்டும். சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் நிலவரம் என்ன?
உலகளவில் ஷியா இஸ்லாமியர்கள் குறைவாக தான் உள்ளனர். சன்னி இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர். ஈரானில் அதிகளவில் ஷியா மக்கள் உள்ளனர். இதற்கு அடுத்ததாக பாகிஸ்தானில் ஷியா மக்கள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சன்னி இஸ்லாமிய நாடாக இருக்கும் பாகிஸ்தானில் ஷியா மக்களை அழிக்கும் வேலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தான் இஸ்லாமாபாத்திலும் ஷியா மசூதியை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications