செய்தியாளரை விடுவிக்க ரூ. 606 கோடி பணம் கேட்ட தீவிரவாதிகள்.. அமெரிக்கா மறுத்ததால் கொலை!
ரக்கா, சிரியா: அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலியை விடுவிக்க ரூ. 606 கோடி பணத்தை பிணையத் தொகையாக கேட்டுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். ஆனால் அதைக் கொடுக்க அமெரிக்க அரசு மறுத்து விட்டது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால்தான் போலியை தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்று விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் அமெரிக்க அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த பேரம் குறித்த முழுவிவரமும் தெரியவில்லை.
பல ஐரோப்பிய நாடுகள் தங்களது பிணையாளிகளை இந்தத் தீவிரவாத அமைப்பிடமிருந்து மீட்க பெருமளவு பணத்தைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளன. ஆனால் அமெரிக்கா பணம் தர மறுத்து விட்டதால் தீவிரவாதிகள் போலியைக் கொன்று விட்டனர்.

இவர் மட்டுமல்ல
போலி மீட்பு விவகாரம் அமெரிக்க அரசுக்கு பெரும் சிக்கலாக இருந்து வந்துள்ளது. காரணம், போலி மட்டுமல்லாமல் மேலும் பல அமெரிக்கர்களையும் தீவிரவாதிகளைப் பிடித்து வைத்துள்ளனர். பணம் தராவிட்டால், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஒவ்வொருவராக கொல்வோம் என்றும் அவர்கள் மிரட்டி வருகின்றனர்.

அதிரடி ரெய்டு பாதகமாகி விட்டது
அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் எதுவுமே செய்யவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்த காரணத்தால்தான் போலியையும் இதர அமெரிக்கர்களையும் மீட்க அமெரிக்க ராணுவம் அதிரடி மீட்பு முயற்சியை எடுத்த செய்தியை பென்டகன் வெளியிட்டது. ஆனால் அதுதான் தீவிரவாதிகளைக் கோபப்படுத்தி போலி மரணத்திற்குக் காரணமாகி விட்டதோ என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

2வது பிணையாளியின் உயிர் ஊசல்
தற்போது அமெரிக்காவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அடுத்த பிணையாளியைக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ். போலி மரணச் செய்தியை அறிவித்தபோதே இன்னொரு அமெரிக்க செய்தியாளரான ஸ்டீவன் சோட்லோப்பையும் கொல்வோம் என்று அது கூறியிருந்தது. இதனால் அவரது உயிர் இப்போது அபாயத்தில் உள்ளது.

உங்கள் கையில் முடிவு
போலியைக் கொன்ற காட்சியிலேயே அந்தக் கொலைக்குப் பின்னர் ஸ்டீவனையும் அதே பாலைவனத்தில் ஆரஞ்சு நிற உடையில் முழங்கால் போட வைத்து, கைகளைப் பின்னால் கட்டி அருகில் தீவிரவாதி நிற்கும் காட்சி வருகிறது. அந்தத் தீவிரவாதி, இந்த அமெரிக்க குடிமகனின் உயிர், ஒபாமா, உங்களது அடுத்த முடிவைப் பொறுத்தது என்று கூறுகிறார்.

3 அமெரிக்கர்கள்
தற்போது தீவிரவாதிகள் பிடியில் 3 அமெரிக்கர்கள் தவிர இங்கிலாந்தைச் சேர்ந்த சிலரும் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தும் கூட தனது நாட்டவரை மீட்க பணம் கொடுப்பதில்லை என்ற உறுதியுடன் உள்ளது.

பணம் கொடு இல்லாட்டி கைதியை விடு
பணம் தான் என்றில்லாமல் தங்களுக்குத் தேவையான கைதிகளை விடுவிக்கவும் கூட ஐஎஸ்ஐஎஸ் பேரம் பேசுகிறதாம். இப்படித்தான் அல் கொய்தாவுடன் தொடர்புடைய, பாகிஸ்தானைச் சேர்ந்த அணு விஞ்ஞான ஆபியா சித்திக்கியை சிறையிலிருந்து பேரம் பேசி விடுவித்ததாம் ஐஎஸ்ஐஎஸ்.












Click it and Unblock the Notifications