இஸ்ரேலை காக்க.. ஈரானின் ஏவுகணைகளை அழிக்கும் இஸ்லாமிய நாடு.. நபிகள் நாயகத்தின் வம்சாவளி மன்னர் அதிரடி
டெல்அவிவ்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் என்பது தீவிரமாகி உள்ளது. நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் இப்போது பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் யூத நாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடு களமிறங்கி உள்ளது. அந்த நாட்டின் மன்னராக இருப்பவர் நபிகள் நாயகத்தின் வம்சாவளி என கருதப்படும் நிலையில் ஜோர்டான் தற்போது இஸ்ரேலை தாக்க செல்லும் ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தி வருகிறது. இஸ்லாமிய நாடாக இருக்கும் ஜோர்டான் ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறி உள்ளது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இஸ்ரேலும், ஈரானும் கடுமையாக மோதி வருகின்றன். ஈரான் மீது நேற்று அதிகாலையில் இஸ்ரேல் ட்ரோன், போர் விமானங்கள், ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரானின் ராணுவ அதிகாரிகள், அணுசக்தி திட்டங்களுக்கான விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று 100க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி இஸ்ரேலை தாக்கியது ஈரான்.
இதன் அடுத்தக்கட்டமாக நள்ளிரவு முதல் ஈரான், ஏராளமான ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி அனுப்பி தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் பல ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்துவிட்டது. இருப்பினும் சில ஏவுகணைகள் இருநகரங்களையும் தாக்கி உள்ளன. காலை 9 மணி நிலவரப்படி கட்டடங்கள் சேதமாகி உள்ளதோடு, ஒருவர் பலியாகி உள்ளார். 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் சுரங்கத்துக்குள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலில் இஸ்ரேலுக்கு இஸ்லாமிய நாடு ஒன்று உதவி வருகிறது.
அந்த நாட்டின் பெயர் ஜோர்டான். நேற்றைய தினம் ஈரானில் இருந்து இஸ்ரேலை தாக்க அனுப்பி வைக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் இன்று அனுப்பி வைக்கப்படும் ஏவுகணைகளை ஜோர்டான் சுட்டு வீழ்த்தி வருகிறது. இஸ்ரேல் - ஜோர்டான் படைகள் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு, ஜோர்டான் உதவி செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இஸ்ரேல் மீதான தாக்குதலை ஜோர்டான் தடுத்துநிறுத்தி உள்ளது. இஸ்ரேல் - ஈரான் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையே ஜோர்டான், ஈராக் உள்ளது.
குறிப்பாக ஜோர்டானின் ஒருபுறம் இஸ்ரேல், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை உள்ளது. மறுபுறம் ஈராக்கும், அதனை தொடர்ந்து ஈரானும் உள்ளது. இதனால் ஈரான் ஏவுகணை, ட்ரோன் மூலம் இஸ்ரேலை தாக்க வேண்டும் என்றால் ஜோர்டான் வான்வெளி பரப்பை பயன்படுத்த வேண்டும். இதனால் தான் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜோர்டான் ஈரானின் ஏவுகணை, ட்ரோன்களை வானிலேயே தாக்கி அழித்து வருகிறது.
ஜோர்டானில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மன்னராக அப்துல்லா இருக்கிறார். இரண்டாம் அப்துல்லா கடந்த 1999ம் ஆண்டு முதல் ஜோர்டான் மன்னராக உள்ளார். அவரது தந்தை உசேன் மறைந்த பிறகு அவர் மன்னர் பொறுப்புக்கு வந்தார். கடந்த 25 ஆண்டுகளாக ஜோர்டானை இரண்டாம் அப்துல்லா தான் வழிநடத்தி வருகிறார். இவர் Hashemite மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். இந்த குடும்பம் நபிகள் நாயகத்தின் வாரிசாக கருதப்படுகிறது. அதாவது நபிகள் நாயகத்தின் 43வது தலைமுறையாக சொல்லப்படுகிறது. இதனால் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுக்கு பல இஸ்லாமிய நாடுகள் சிறப்பு மரியாதை அளிக்கின்றன.
மாறாக இஸ்ரேலை எடுத்து கொண்டால் அது யூத நாடு. இருப்பினும் காலம் காலமாக இஸ்ரேல் - ஜோர்டான் இடையே நல்ல உறவு உள்ளது. கடந்த 1994ம் ஆண்டில் இஸ்ரேல் - ஜோர்டான் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தம் தான் இருநாடுகளுடனான நல்லுறவுக்கு முக்கிய காரணம். அதன்படி இருநாடுகளும் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன. இஸ்ரேல் உடனான பந்தம் காரணமாக இரண்டாம் அப்துல்லா இஸ்லாமிய நாடான ஈரானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும் ஜோர்டான் அடிப்படையில் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கி நட்பு உள்ளது. இது ஜோர்டான் - இஸ்ரேல் நட்பை இன்னும் நெருக்கமாக்கி உள்ளது என்பதும் இன்னொரு காரணமாகும். ஜோர்டான் மன்னராக தற்போது இரண்டாம் அப்துல்லா உள்ளார். இவர் வெளிப்படையாகவே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். கடந்த ஆண்டு ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது இஸ்ரேலுக்கு உதவிய ஒரேயொரு இஸ்லாமிய நாடு என்றால் அது ஜோர்டான் தான். கடந்த ஆண்டு அக்டோபரில் திடீரென்று ஈரான் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியது. இந்த ஏவுகணைகளை வான்வெளி பரபரப்பிலேயே ஜோர்டான் சுட்டு வீழ்த்தி இஸ்ரேலுக்கு உதவியது. இப்போதும் இஸ்ரேலுக்கு உதவியாக ஜோர்டான் களமிறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications