கூண்டோடு காலி செய்த இஸ்ரேல்.. ஈரான் புதிய தலைவரை தேர்வு செய்ய கூடிய கூட்டம் மீதும் தாக்குதல்!
தெஹ்ரான்: கமேனி கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக ஈரான் அதிகாரிகள் கூட்டிய கூட்டத்தினையே தற்போது இஸ்ரேல் காலி செய்து இருக்கிறது. தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில் அமைந்துள்ள 'நிபுணர்கள் சபை' கட்டிடத்தை இஸ்ரேல் அழித்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த காரணத்தால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். அதேபோல் அவரது மகள், பேரக்குழந்தை, மருமகன், மருமகள் மற்றும் மனைவியும் உயிரிழந்தனர். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
இதன்பின்னர் அமெரிக்கா-இஸ்ரேலை பழித் தீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. பக்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக குவைத், ஜோர்டானில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், சவுதி அரேபியாவில் உள்ள எண்ணை கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டன. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன.
அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
ஈரானின் தாக்குதலில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். ஈரானுக்கு பதிலடியாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து மாறி மாறி குண்டுகளை வீசி வருகின்றன. 4 வது நாளாக அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. ஈரானின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதலை நடத்தியது.
ஈரான் புரட்சிகர காவல் படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை-டிரோன் ஏவுதளங்கள், விமான தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை தெரிவித்து உள்ளது.
மொத்தமாக காலி செய்த இஸ்ரேல்
இந்த நிலையில் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக கூடியிருந்த கூட்டத்தினையே தற்போது இஸ்ரேல் காலி செய்துள்ளது. தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில் அமைந்துள்ள 'நிபுணர்கள் சபை' கட்டிடத்தில் இக்கூட்டமானது கூட்டப்பட்டது.
ஏற்கனவே தீவிரமாக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் சரியாக இந்த கட்டிடத்தினையும் குறி வைத்து தாக்கியுள்ளது. இதனை உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் இந்த தாக்குதல்களில் கட்டிடம் சேதமடைந்துள்ளது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த கட்டிடத்தில் மதகுருக்கள் அனைவரும் இருந்தார்களா? அல்லது யாருமே இல்லையா? என்ற தகவல் வெளிவரவில்லை.
88 பேர் கொண்ட குழு
உச்ச தலைவர் (Supreme Leader) பதவிதான் ஈரானின் மிக உயர்ந்த பதவி. நாட்டினுடைய அடிப்படை கொள்கைகளை வடிவமைத்தல், ராணுவம், வெளியுறவுக் கொள்கை மற்றும் நீதித்துறை என அனைத்திலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உச்ச தலைவருக்கே இருக்கிறது. இவ்வளவு அதிகாரம்மிக்க பதவியில் அலி கமேனி கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 36 ஆண்டுகளாக நீடித்து வந்தார்.
கமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அல்லது பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நிபுணர்கள் குழு எனப்படும் 88 பேர் கொண்ட குழுவிடம் தான் உள்ளது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ஷியா மதகுருக்கள். இவர்கள் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அடுத்த 50 நாட்களுக்குள்
88 உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு ஆதரவு பெறுபவர் அடுத்த உச்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார். மேலும் அந்நாட்டு சட்டப்படி உச்ச தலைவர் பதவி காலியானால், அடுத்த 50 நாட்களுக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இதன் காரணமாகவே ஒருபுறம் தாக்குதல் நடந்து வந்தாலும் மறுபுறம் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் பணியும் தொடங்கி நடந்து வந்ததாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியிருந்தார். இந்த நிலையில் இக்கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஈரான் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications