காசாவில் கழுதைகளை திருடும் இஸ்ரேல் ராணுவம்.. யாருமே எதிர்பார்க்காத சம்பவம்.. ஏன் தெரியுமா?
காசா: பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை குறிவைத்து திருடி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்துக்கு அனுப்பி வருகிறதாம். போருக்கு நடுவே காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை திருடுவதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம் தேதி போர் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் மொத்த காசா நகரமும் உருக்குலைந்துவிட்டது. காசாவில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போது இஸ்ரேல் ராணுவம் காசாவில் முகாமிட்டு தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் இஸ்ரேல் சிக்கலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை ஐநா மட்டுமின்றி பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கண்டித்துள்ளன.
ஆனாலும் இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காசாவில் இருந்து கழுதைகளை இஸ்ரேல் ராணுவம் திருடி செல்வதாக பரபரப்பான புகார் எழுந்துள்ளது. தற்போது பலநூறு கழுதைகளை இஸ்ரேல் ராணுவம் திருடி வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி காசா கழுதைகள் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெல்ஜியத்துக்கு கழுதைகளை அனுப்ப தேவையான நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். காசாவில் போர் புரியும் இஸ்ரேல் ஏன் திடீரென்று கழுதைகளை குறிவைத்துள்ளது என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் எழலாம். இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்களுக்கு உதவும் மக்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று தான் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போரின் காரணமாக காசாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் காசா மக்கள் தங்களின் போக்குவரத்து மற்றும் சுமைகளை சுமக்கவும், இடம்பெயரவும் கழுதைகளை தான் பயன்படுத்தி வருகி்னறன. தண்ணீர், உணவு மற்றும் இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இஸ்ரேலின் கண்களை உறுத்தியது. இதனால் தான் கழுதைகளை திருடி வெளிநாடுகளுக்கு இஸ்ரேல் ராணுவம் அனுப்பி வருகிறது. இதன்மூலம் காசாவில் தற்போது உள்ள மக்கள் இன்னும் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இதனால் நாளடைவில் அவர்கள் காசாவை விட்டு மொத்தமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படலாம் என இஸ்ரேல் நினைக்கிறது.
இந்த கழுதைகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பண்ணைக்கு மொத்தமாக மாற்றப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபற்றி இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‛‛காசாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கழுதைகள் முதற்கட்டமாக பிரான்ஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் பெல்ஜியத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கழுதைகள் மீண்டும் காசாவிற்கு வராது. இது உள்ளூர் மக்களை வெகுவாக பாதிக்கும். இதனை குறிக்கோளாக வைத்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications