அடிமடியில் கை வைக்கும் நெதன்யாகு.. ஈரானின் எண்ணெய் கிடங்குகளை.. சரமாரியாக தாக்கிய இஸ்ரேல்.. போச்சு
தெஹ்ரான்: ஈரான் நாட்டின் எண்ணெய் கிடங்குகளை, பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு மையங்களை, கச்சா எண்ணெய் சேமிப்பு மையங்களை இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது.
எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதிப்பு
மூன்றாவது நாளாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் எண்ணெய் மையங்கள் குறி வைக்கப்பட்டன. ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தெற்கு புஷேர் மாகாணத்தில் உள்ள பார்ஸ் எரிவாயு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இஸ்ரேல் - ஈரான் போரால் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்படும் என்ற கவலைகள் ஏற்கனவே கச்சா எண்ணெயின் விலையை உயர்த்தியது. இஸ்ரேல் தனது தாக்குதலின் முதல் நாளில் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையைத் தாக்கவில்லை என்றாலும், முதல் நாளே கச்சா எண்ணெய் விலை சுமார் 7% உயர்ந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று ஈரானின் எண்ணெய் கிடங்குகள் கடுமையாக தாக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்?
சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில், ஹைஃபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்து எரிவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று சில தகவல்கள் வெளியானாலும், இதுகுறித்து இஸ்ரேல் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இது ஏவுகணைத் தாக்குதலாக இருக்குமானால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஈரானும் இஸ்ரேலும் போர் முனைப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் இப்போர் விரிவடையும் என்று ஈரான் எச்சரிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போரை விரிவுபடுத்த ஈரான் முடிவு:
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என உயர் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் அரசு தரப்பு வெளியிட்ட செய்தியில், "வரவிருக்கும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும். இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் 'ரைசிங் லயன்' நடவடிக்கையைத் தொடங்கியவுடன், ஈரான் நேற்று இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை செலுத்தியது. இதில் குடியிருப்புகள் தாக்கப்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இஸ்ரேலியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications