2025ல் ஒவ்வொரு 27 நிமிடத்திற்கு ஒருமுறை.. காசா மீது குண்டு வீசிய இஸ்ரேல்! ஷாக் ரிப்போர்ட்
டெல் அவிவ்: இந்த ஆண்டு இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது. ஆண்டு முழுவதும் நடந்த ஏராளமான விஷயங்களை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றன. அந்த வகையில் 2025ல் நடந்த மோசமான விஷயம், பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள்தான். இது தொடர்பான அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது இஸ்ரேல் ஒவ்வொரு 27 நிமிடங்களுக்கு ஒரு முறை என மொத்தம் 365 நாட்களில் 19,500 அதிகமான முறை பாலஸ்தீனம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு முழுவதும் நடத்திய தாக்குதல்கள் குறித்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 20,900 இலக்குகள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதேபோல பல்வேறு நாடுகளில் சுமார் 430 பெரிய அளவிலான தரைவழி மற்றும் சிறப்பு ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறி இருக்கிறது. இஸ்ரேல் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, காசாவில் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மொத்தம் 19,500க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 27 நிமிடங்களுக்கு ஒரு முறை என, ஒரு நாளைக்கு 53 முதல் 54 முறை வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு இந்த எண்ணிக்கை சமமாகும்.
இதையடுத்து ஈரான் மீது சுமார் 1,500 முறை தாக்குதல்கள் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரின்போது இந்த தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து, இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த இரண்டு நாடுகள் தவிர, லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. லெபனானில் இருந்து இயங்கும் இஸ்புல்லா அமைப்புக்கு எதிராக, சுமார் 950 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மேலும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சுமார் 20-க்கும் மேற்பட்ட பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இது இல்லாமல் வெஸ்ட் பேங்க் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பிரிகேட் அளவிலான தேடுதல்கள் மற்றும் அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரிகேட் என்பது 5000 ராணுவ வீரர்கள் அடங்கிய குழு. ஒரு கிராமத்தை பிரிகேட் சுற்றி போட்டு விட்டால், அங்கிருந்து ஒரு எறும்பு கூட தப்பிக்க முடியாது. ஒரு சிறிய குண்டூசியை தேட, மிகப்பெரிய காந்தத்தை களமிறக்குவதற்கு சமம்தான் இந்த பிரிகேட் சோதனை. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும். இதைத்தான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் செய்தது.
இது தவிர, சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில், ஆயுத கடத்தல் மற்றும் ஈரான் ஆதரவு குழு ஆகியவற்றை தடுக்க தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் மற்றும் ஈரானின் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2025ல் மட்டும் இஸ்ரேல் தரப்பில் 91 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 800-க்கும் அதிகமான வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் வரலாற்றிலேயே 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களை போல இதற்கு முன்னர் எப்போதும் நடத்தப்பட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications