ஹமாஸ் தீவிரவாதிகள் அனுப்பிய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்: தாக்குதலை தீவிரப்படுத்தியது
ஜெருசலேம்: காசா மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேல், ஹமாஸ் அனுப்பிய ஆளில்லா உளவு விமானத்தை (ட்ரோன்) சுட்டு வீழ்த்திவிட்டதாக அறிவித்துள்ளது. தாக்குதல்கள் ஒரு வாரமாக நடந்துவரும் நிலையில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது இதுதான் முதன்முறையாகும்.
இஸ்ரேல் வாலிபர்கள் 3 பேர் கடத்தி கொல்லப்பட்டதாலும், பாலஸ்தீன வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாலும், இஸ்ரேல்-காஸா இடையே இருந்து வந்த பகைமை, போராக உருவெடுத்துள்ளது. இஸ்ரேல் மீது காஸா முனை பகுதியை ஆட்சி செய்துவரும் ஹமாஸ் தீவிரவாதிகள் (பாலஸ்தீன சன்னி முஸ்லிம் பிரிவினர்) ராக்கெட் வீச்சு நடத்துகின்றனர்.
பதிலுக்கு காஸா முனை மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஒரு வாரகாலமாக நடந்து வரும் இந்த யுத்தத்தில் 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆளில்லா உளவு விமானமான ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்துள்ளது. அஷ்தூத் என்ற இஸ்ரேல் நாட்டு எல்லை பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல உளவு விமானங்களை இஸ்ரேலை உளவு பார்க்க அனுப்பி வைத்துள்ளதாக ஹமாஸ் அறிவித்திருந்த நிலையில், ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இஸ்ரேல் பெரும்பாலும் வான் வழி தாக்குதலை நடத்திவந்த நிலையில், அதன் கடற்படையும், எதிரிகளின் முகாம்களை குறிவைத்து குண்டு வீச தொடங்கியுள்ளன. இந்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களில் 70 சதவீதத்தினர் குடிமக்கள்தான் என்று ஐநா தெரிவிக்கிறது. 1,250 பேர் காயமுற்றுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிக அளவில் இறப்பதை கருத்தில்கொண்டு, காசா எல்லையிலுள்ள பாலஸ்தீன மக்களை அங்கிருந்து கிளம்பி செல்லும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. இதன்பிறகு தாக்குதலை இன்று முதல் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications