இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்.. மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு.. கத்தார் அறிவிப்பு!
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தமானது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியினை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்த நிலையில், தான் கடந்த மாதம் 7- ஆம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை முன்னெடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது தாக்குதலை நடத்த தொடங்கியது.

முன்னதாக இஸ்ரேலுக்குள் புகுந்த்ந ஹமாஸ் அமைப்பினர் 250 - க்கும் அதிகமானோரை துப்பாக்கி முனையில் கடத்தி காசா பகுதிக்கு இழுத்து சென்றனர். இதில் வெளிநாட்டவர்களும் அடங்குவர். இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேலின் மும்முனை தாக்குதலில் காசா நகரம் நிலைகுலைந்துள்ளது. இதற்கிடையே, பிணைகைதிகளை விடுவிக்கவும், பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தற்காலிகமாக போரை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தம் செய்தது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் 50 பணய கைதிகளை விடுவிக்கவும், அதற்கு ஈடாக 4 நாட்களுக்கு போரை நிறுத்தவும் உடன்பாடு ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் முதல் கட்டமாக 25 பிணைக்கைதிகளை விடுவித்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தமானது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications