நீங்க 2 பேரும் நண்பர்கள் தான்.. இஸ்ரேல் - ஈரான் மோதலில் இந்தியா எடுத்த நிலைப்பாடு.. என்ன அது?
டெல்லி: இஸ்ரேல் - ஈரான் கடுமையாக மோதி வருகின்றனர். இன்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முக்கிய மெசேஜை இருநாடுகளுக்கும் அனுப்பி உள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது. இந்த மோதல் என்பது தற்போது அதிகரித்து வருகிறது. காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை ஈரான் விரும்பவில்லை. இதனால் கடந்த ஆண்டு ஈரான் தனது ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலின் 100க்கும் அதிகமான போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இருநாடுகள் இடையே மோதல் இருந்தாலும் தாக்குதல் நடைபெறவில்லை. இதற்கிடையே தான் இன்று ஈரான் மீது இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைகளை கொண்டு தாக்கியது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களின் உள்கட்டமைப்பு மற்றும் ராணுவதளங்களை இஸ்ரேல் குறிவைத்து அடித்தது. குறிப்பாக ஈரானில் அணுசக்தி திட்டங்களுக்கான முக்கிய தளம் நடான்ஸ் நகரில் உள்ளது. இங்கு தான் யுரேனியம் செறிவூட்டப்படுகிறது. இங்கு செறிவூட்டப்படும் யுரேனியத்தை வைத்து தான் ஈரான் அணுகுண்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் தான் இஸ்ரேல் நடான்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் தளத்தை தாக்கி உள்ளது. இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.
இதற்கு ஈரான் இப்போது பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. ஈரானில் இருந்து கொத்து கொத்தாக ட்ரோன்கள் இஸ்ரேலை தாக்க அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ட்ரோன்களை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்து உள்ளது. நம் நாட்டுடன் இஸ்ரேல் மற்றும் ஈரான் என 2 நாடுகளும் நல்ல நட்பில் உள்ளன. இதனால் இந்த மோதலின் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிய பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழில் தான் நம் நாட்டின் வெளியுறவுத்துறை முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‛‛ ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்திய மோதல் பற்றி ஆழ்ந்த கவலை கொள்கிறோம். அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் இருநாடுகளின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பதற்றமான நடவடிக்கைகளையும் தவிர்க்கும்படி இந்தியா இரு தரப்பினரையும் வலியுறுத்துகிறது.
தற்போதைய பிரச்சனையை தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம்தீர்க்க வேண்டும். இந்தியா இரு நாடுகளுடனும் நெருக்கமாக இருப்பதோடு, நட்புறவு வைத்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். இரு நாடுகளிலும் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய நாட்டு மக்களுடன் தொடர்பில் உள்ளன. பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும், அந்தந்த நாடுகளில் வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டை எடுத்து கொண்டால் இஸ்ரேலிடம் ட்ரோன் உள்பட முக்கிய ராணுவ தளவாடங்களை வாங்குகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்குவதால் நம் நாடு பல்வேறு தொழில்நுட்பங்களை இஸ்ரேலுடன் பெற்றுள்ளது. அதேபோல் சமீபத்தில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது முதல் நாடாக இஸ்ரேல் நம் நாட்டை ஆதரித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததை இஸ்ரேல் வெளிப்படையாக வரவேற்றது. அதோடு இஸ்ரேலிடம் வாங்கி ட்ரோன் மூலம் பாகிஸ்தானையும் நம் நாடு பதம் பார்த்தது. இதனால் இஸ்ரேலை நம் நாட்டால் கைவிட முடியாது.
மறுபுறம் ஈரானை எடுத்து கொண்டால் ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ளது. இந்தியாவும் அதில் உள்ளது. இருநாடுகள் இடையே நீண்டகாலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த பொருளாதார தடைகளுக்கு முன்பாக ஈரானிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கியது. இப்போது ஈரானிடம் கச்சா எண்ணெயை நம் நாடு வாங்கவில்லை என்றாலும் நல்ல நட்பாக உள்ளது. பிரதமர் மோடிக்கும், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கும் நல்ல நட்பு இருக்கிறது.
. ஈரானின் சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தின் மேம்படுத்த நம் நாடும், ஈரானும் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஏற்கனவே இருநாடுகள் இடையே இருக்கும் வர்த்தகத்தை அதிகரிக்கும். மேலும் இந்தியாவும் ஈரானும் முக்கியமான வர்த்தக பங்காளிகள். சமீபத்திய ஆண்டுகளில் ஈரானின் ஐந்து பெரிய வர்த்தக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஈரானுக்கு நம் நாட்டில் இருந்து அரிசி, டீத்தூள், சர்க்கரை, மருந்துகள் மின் இயந்திரங்கள், நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரானில் இருந்து உலர் பழங்கள், கனிம/கரிம இரசாயனங்கள், கண்ணாடிப் பொருட்களை நம் நாடு இறக்குமதி செய்கிறது. இதனால் ஈரானையும் நம்மால் பகைக்க முடியாது. இதன் காரணமாக தான் இஸ்ரேல் - ஈரான் இடையேயான பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று நம் நாடு வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications