இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராக திரும்பும் இலங்கை முஸ்லீம்கள்? மோப்பம் பிடித்த மொசாட்.. பறந்த வார்னிங்
ஜெருசலேம்: இஸ்ரேல் கடந்த ஓராண்டில் நடத்தி வரும் தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையில் இருக்கும் இஸ்ரேல் யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது. இலங்கையில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக பல அமைப்புகளும் நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கு நாடுகளை போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது.

ஹமாஸ் தொடங்கி இஸ்ரேலுக்கு எதிராக, லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுத்தி, ஈரான் உள்ளிட்டவை தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பலமுனை தாக்குதல்களை நடத்த வேண்டிய நிலை இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவித்து நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் ஏரளாமனோர் பலியாயினர்.
இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கியது. போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் உச்சபட்ச தலைவரான யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தெற்கு காசாவில் ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வரும் ஒருவர் என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், சின்வரின் இறுதி நிமிட ட்ரோன் காட்சிகளையும் இஸ்ரேல் வெளியிட்டது. இதனால் உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
மேலும் பல தீவிரவாத அமைப்புகள் யூதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்த இஸ்ரேலிய யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் தொடர்ந்து இஸ்லாமிய போராளி குழுக்கள், தீவிரவாத அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி பல முக்கிய தலைவர்களை கொன்று வருவதால் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள், இஸ்ரேலைச் சார்ந்த யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலிய யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த அறிவிப்பு இலங்கையில் உள்ள இஸ்ரேலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications