"நம்பர் 2" தலைவர் காலி! ஹிஸ்புல்லா உளவு படை மையம் தரைமட்டம்.. நள்ளிரவில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழை!
டெல் அவிவ்: லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இப்போது தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றிரவு நடந்த வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் உளவுப் பிரிவு தலைமையகம் தாக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹிஸ்புல்லாவின் நம்பர் 2 தலைவராகக் கருதப்பட்ட சஃபிதீன் என்பவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் மீது ஒரு பக்கம் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரமாக நடத்திய நிலையில், அடுத்த கட்டமாக ஹிஸ்புல்லா மீது தனது பார்வையைத் திருப்பியது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்கிய இலக்குகளைக் கண்டறிந்து குறிவைத்து வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
உளவு படை: நேற்றிரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள பல இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது அதில் குறிப்பாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் புலனாய்வுப் பிரிவின் மிக மூத்த ஹிஸ்புல்லா அதிகாரியான முகமது அனிசி என்பவரைக் கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அதேபோல ஏற்கனவே கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாகக் கருதப்படும் மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி ஹஷேம் சஃபிதீன் என்பவரும் இதில் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த தகவலை இஸ்ரேலும் உறுதி செய்யவில்லை. ஹிஸ்புல்லா அமைப்பும் இது குறித்து எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
நம்பர் 2 தலைவர்: அதேநேரம் பல சர்வதேச ஊடகங்களில் இந்தத் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது நேற்று வியாழன் நள்ளிரவில் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ரசகிய சுரங்கத்தில் ஹிஸ்புல்லா அதிகாரிகளின் கூட்டத்தில் சஃபிதீன் கலந்து கொண்ட நிலையில், இதில் அவர் கொல்லப்பட்டார். லெபனான் நாட்டில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இது தான் மிக பெரியது என்றும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. இந்தத் தாக்குதலில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
நஸ்ரல்லா இருந்த போதே ஹிஸ்புல்லாவின் நம்பர் 2 தலைவராக சஃபிதீன் பார்க்கப்பட்டார். நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்ற நிலையில், சஃபிதீன் கட்டுப்பாட்டில் மொத்தமாக ஹிஸ்புல்லா அமைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவரையும் இரவோடு இரவாகக் கொன்றுள்ளது இஸ்ரேல்.
யார் இவர்: 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் தான் இந்த ஹஷேம் சஃபிதீன்.. ஹிஸ்புல்லா அரசியல் விவகாரங்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ள இந்த சஃபிதீன், ஹிஸ்புல்லா ஜிஹாத் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த ஜிஹாத் குழு தான் ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகளை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் ஆட்சியுடன் நேரடியாகவே உறவுகளைக் கொண்ட ஒரு தலைவரா சஃபிதீன் கருதப்படுகிறார்.
தீவிரமடையும் தாக்குதல்: நேற்றிரவு பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. இது ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் சொல்லி சில மணி நேரத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications