500 பேர் பலி.. ‛சேட்டிலைட் போட்டோ’ எங்கே? காசா மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேலுக்கு எதிரியான ரஷ்யா
இஸ்ரேல்: காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் என 500 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யா கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு சேட்டிலைட் போட்டோக்களை ஆதாரமாக வெளியிட வேண்டும் என ரஷ்யா போர்க்கொடி உயர்த்தி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7 ம் தேதி தொடங்கிய இந்த மோதல் போராக மாறியுள்ளது. இன்று 12வது நாளாக போர் நீடிக்கிறது.

இப்போது வரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காசாவில் இருந்து ஏராளமான மக்கள் வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்றுள்ளனர்.
மேலும் காசாவில் கடுமையான தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் காசாவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இஸ்ரேல் அறிவுறுத்தி உள்ளது. முதற்கட்டமாக வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அந்த மருத்துவமனை கட்டடம் மொத்தமாக உருக்குலைந்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அப்பாவி பொதுமக்கள் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மருத்துவமனை மீது இஸ்ரேல் தான் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளதாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் அந்த குற்றச்சாட்டை மறைக்கிறது. ஹமாஸ் அமைப்பே இந்த தாக்குதலை நடத்திவிட்டு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டுவதாக தெரிவித்துள்ளது. இதனால் மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நூர் கிலோன் கூறுகையில், ‛‛தற்போது அனைத்து விஷயங்களும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனை மீதான தாக்குதல் பாலஸ்தீனத்தின் ராக்கெட்டால் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. கோழைத்தனமான கொலை, கடத்தல் சம்பவங்களை செய்த பிறகும் கூட அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்'' என தெரிவித்து இருந்தார்.
இப்படி குழப்பத்துக்கு நடுவே இந்தியா உள்பட பல நாடுகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அப்பாவிகள் கொல்லப்பட்டு இருக்கும் சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும். அதோடு இந்த போரை உடனே நிறுத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தான் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இஸ்ரேலை சாடியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறியதாவது: ‛‛இது ஒரு கொடூரமான செயல். மனிதாபிமானமற்ற செயலாக நாங்கள் இதனை பார்க்கிறோம்.
மேலும் இந்த சம்பவத்தில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள தெளிவான முயற்சிகள் உள்ளன. இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் மேற்கொள்ளவில்லை என ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுவது போதுமான ஒன்று இல்லை. சேட்டிலைட் போட்டோக்களை வெளியிட வேண்டும். இதனை இஸ்ரேலில் கூட்டாளியாக உள்ள அமெரிக்கா செய்ய வேண்டும்'' எனக்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications