புதிய யுக்தி.. லெபனான் மக்கள் செல்போனுக்கு பறந்த மெசேஜ்! ரூல்ஸை அப்பட்டமாக மீறும் இஸ்ரேல்!
பெய்ரூட்: ஹமாஸை அழிப்பதாக கூறி காசாவை நாசம் செய்ததை போல, ஹிஸ்புல்லாவை அழிப்பதாக கூறி தற்போது லெபனான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது இஸ்ரேல். இதில் அந்நாட்டு ராணுவம் பயன்படுத்திய யுக்தி போரின் வரைமுறைகளை மீறுவதாக இருப்பதாக லெபனான் விமர்சித்துள்ளது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், இதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில், 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடுத்தது. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல்தான் தற்போது நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கான தொடக்கப்புள்ளி.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தீவிர போரை அறிவித்தது இஸ்ரேல். இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் பாலஸ்தீன மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனா ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது.
எனவே, என்ன செய்வது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நவீன டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்திலும், ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களைதான் தற்போதுவரை பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், இதனை ஹேக் செய்ய முடியாது. செல்போனை ஹேக் செய்து, இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பேஜரில் அப்படி செய்ய முடியாது. இருப்பினும் இந்த பேஜரை மொத்தமாக கொள்முதல் செய்த இடத்தில் சில தில்லு முல்லு வேலைகள் நடந்திருக்கின்றன.
இந்த பேஜர்கள் ஹங்கேரியில்தான் அசெம்பிள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி செய்யும்போது வெடிபொருட்கள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் இஸ்ரேல் இதை வெடிக்க செய்திருக்கிறது. பேஜர் மட்டுமல்லாது வாக்கி டாக்கி, செல்போன், சோலார் பேனலுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி என அனைத்தும் வெடித்து சிதறியுள்ளன. இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிஸ்புல்லாவை அழிப்பதாக கூறி பேஜர் தாக்குதல் மூலம் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக லெபனான் கண்டித்துள்ளது. இந்த பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலை ஐநாவும் கண்டித்திருக்கிறது. இதனை தொடர்ந்து போர் விமானங்கள் மூலம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்கதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலில் 180க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மறுபுறம் இஸ்ரேல் ராணுவம் உளவியல் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. Psychological warfare எனப்படும் இந்த உளவியல் தாக்குதல் மூலம், லெபனான் மக்களை இஸ்ரேல் அச்சமடைய வைத்திருக்கிறது.
அதாவது லெபானான் பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்களில் 80,000 போன்களுக்கு இஸ்ரேல் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளது. இதில் குறிப்பிட்ட வரைபடத்தை பகிர்ந்து, அங்கு ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்கள் இருப்பதாகவும், எனவே அங்கெல்லாம் குண்டு வீசப்போகிறோம் என்று கூறியுள்ளது. இந்த பாணி காசாவிலும் பயன்படுத்தபட்டது. ஆனால் அங்கு இதுவரை ஹமாஸின் ஒரே ஒரு ஆயுத கிடங்கை கூட இஸ்ரேல் கைப்பற்றவில்லை. எனவே இந்த எஸ்எம்எஸ் ஒரு உளவியல் தாக்குதல் என்று லெபானான் அரசு கூறியுள்ளது.
மட்டுமல்லாது இதுபோன்ற உளவியல் தாக்குதல் பொதுமக்கள் மீது நடத்தப்படக்கூடாது என்று போர் விதி முறைகள் கூறுகின்றன. இந்த விதிமுறைகளை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாக லெபனான் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications