"எனது வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்" - ஜாக் மா அறிவிப்பு
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
"நான் அளித்த வாக்குறுதியை திரும்ப பெறுகிறேன்" - ஜாக் மா அறிவிப்பு
உலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான அலிபாபாவின் மூலம் அமெரிக்காவில் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக அதன் நிறுவன தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சீனாவின் சின்ஹுவா செய்தி முகமையிடம் பேசிய அவர், "என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வழியேயில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, அலிபாபாவின் முதலீட்டாளர்கள் மாநாட்டில், இவ்விரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தில் நிலவும் குழப்ப நிலை பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஜாக் மா பேசியிருந்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கொக்கைன் உற்பத்தி வரலாறு காணாத வகையில் உயர்வு
கடந்த 2017ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கொலம்பியாவில் கொக்கைன் உற்பத்தி அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை புதிதாக வெளியிட்டுள்ள தரவுப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 1,71,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கோக்கைன் உற்பத்தி அதற்கு முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகரித்து, சுமார் 1,400 டன் கொக்கைன் உற்பத்திசெய்யப்பட்டதாக அந்த தரவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் கொக்கைன் தயாரிக்கும் நாடுகளில் கொலம்பியா முதலிடத்திலும், அதை அதிகளவில் நுகரும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெஃப் செஷன்ஸ் மீது டிரம்ப் மீண்டும் தாக்கு
'எனக்கு அட்டார்னி ஜெனரல் என்று யாருமே கிடையாது' என்று கூறி அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் மீது கடுமையான தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார்.
ஹில் டிவி என்ற தொலைக்காட்சி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த விசாரணையில் இருந்து பதவி விலகிய ஜெஃப் செஷன்ஸை டிரம்ப் விமர்சித்தார்.
மேலும், நாட்டில் முக்கியமானதாக கருதப்படும் குடியேற்றம் தொடர்பான பிரச்சனையில் ஜெஃப் செஷன்ஸின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் டிரம்ப் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்
ஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் ஆகியோர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவர்களது தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டதுடன், உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கும் ஆணை இட்டது.
முன்னர், கடந்த ஜூலை மாதம், லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பிற செய்திகள்:
- "ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா": தென்கொரிய அதிபர் தகவல்
- தெலங்கானாவில் மேலும் ஒரு காதல் தம்பதி மீது கொலைவெறி தாக்குதல்
- இலங்கை மன்னார் மனித புதைகுழி: "எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது"
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
















Click it and Unblock the Notifications