ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு
டோக்கியோ: வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு 6.9 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 73 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த புவியியல் ஆய்வுத்துறை முதல் தகவலாக தெரிவித்தது.

இதனிடையே ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமும் இரண்டாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதி செய்தது, இந்த மையம் (ஈ.எம்.எஸ்.சி) 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. மக்கள் அதிர்ச்சி அடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதிகளில் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இஷினோமகி, 57 கி.மீ தூரத்தில் உள்ள யமோட்டோ , 68 கி.மீ தூரத்தில் உள்ள ஒஃபுனாடோ , 75 கி.மீ தூரத்தில் உள்ள ஷியோகாமா, 80 கி.மீ தூரத்தில் உள்ள ஃபுருகாவா, 81 கி.மீ தூரத்தில் உள்ள இச்சினோசெக்கி , 90 கி.மீ தூரத்தில் உள்ள செண்டாய், 98 கி.மீ தூரத்தில் உள்ள மிசுசாவா ஆகிய பகுதிகளில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications