"ஐ மிஸ் யூ மம்மி.." நிமிஷா பிரியாவின் மகள் கண்ணீர் கடிதம்! 10 ஆண்டுகளாக பார்க்க கூட முடியல என வேதனை
சனா: கேரள செவிலியர் நிமிஷா பிரியா இப்போது ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கிறார். அவரை மீட்டுக் கொண்டு வர பல்வேறு தரப்பும் முயன்று வரும் நிலையில், அவரது 13 வயது மகள் மிஷெல் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாகத் தாயைப் பார்க்காத மிஷெல், தனது தாயை ரொம்பவே மிஸ் செய்வதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியா சிறையில் இருக்கிறார். அங்கு அவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரை மீட்டு வர பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், நிரந்தர தீர்வு இன்னும் காணப்படவில்லை.

13 வயது மகள்
இதற்கிடையே சிறையில் வாடும் இந்தியச் செவிலியர் நிமிஷா பிரியாவின் 13 வயது மகள் மிஷெல் இப்போது ஏமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். தந்தை டாமி தாமஸ் மற்றும் டாக்டர் கே.ஏ.பால் ஆகியோருடன் மிஷெலும் ஏமனுக்கு போய் இருக்கிறார். தனது தாயை மன்னித்து விடுவிக்கும்படி மிஷெல் ஏமன் நாட்டின் அதிகாரிகளைச் சந்தித்து கருணை மனு அளித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா பல ஆண்டுகளாகவே கொலை குற்றச்சாட்டில் ஏமன் சிறையில் இருக்கிறார். இதன் காரணமாக அவரது மகள் மிஷெல் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிமிஷாவை பார்க்க முடியவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது மிஷெல் நேரடியாக ஏமன் நாட்டிற்குச் சென்றிருக்கிறார்.
ஐ மிஸ் யூ மம்மி
இதற்கிடையே மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மிஷெல் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், "ஐ லவ் யூ மம்மி.! தயவுசெய்து என் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர உதவுங்கள். நான் எனது அம்மாவைப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஐ மிஸ் யூ மம்மி" என்று அவர் கடிதம் எழுதியிருக்கிறார். அதேபோல நிமிஷாவின் கணவர் டாமி தாமஸும் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அவர், "தயவுசெய்து என் மனைவி நிமிஷா பிரியாவை காப்பாற்றி, அவரது சொந்த ஊருக்கு வர உதவுங்கள்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏமன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
நிமிஷாவின் கணவர் மற்றும் மகளுடன் ஏமன் அதிகாரிகளிடம் பேசிய டாக்டர் கே.ஏ. பால் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏமன் அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தலால் மஹ்தி குடும்பத்தினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இது தொடர்பாக கேஏ பால் மேலும் கூறுகையில், "நிமிஷாவின் ஒரே மகளால் கூட கடந்த 10 வருடங்களாக அவரைப் பார்க்க முடியவில்லை. இந்தச் சூழலில் பேச்சுவார்த்தைக்கு வந்த மஹ்தி குடும்பத்தினருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நிமிஷாவை விடுவித்தால் நாங்கள் நிச்சயம் கடமைப்பட்டவராக இருப்போம்
நிமிஷா இந்தியாவின் மகளாகவும், சமாதானத்தின் அடையாளமாகவும் இருப்பதால், ஏமன் முதலீடுகளையும் செழிப்பையும் பெறும். நீங்கள் செய்வது ஒரு அற்புதமான செயல். வெறுப்பை விட அன்பு வலிமையானது என்பதை நிரூபிக்கிறீர்கள். போர்கள் மற்றும் தேவையற்ற மோதல்களால் உலகம் சீர்குலைந்து வருகிறது. இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும். இது உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
நிமிஷா பிரியா வழக்கு
நிமிஷா பிரியாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அப்போது கேரளாவைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்டார். இதையடுத்து ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. மத்திய அரசும் கூட இந்த விவகாரத்தில் நட்பு நாடுகளை வைத்து தீவிரமாக முயன்று வருகிறது.
மஹ்தி என்பவரைக் கொன்ற வழக்கில் 2018 மார்ச் மாதம் நிமிஷா பிரியா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டில் யேமன் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. 2024 டிசம்பரில் ஏமன் அதிபர் ராஷாத் அல்-அலிமி அவரது மரண தண்டனையை உறுதி செய்தார். இதையடுத்து அவரை காப்பாற்றும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications