1,180 கி.மீ ரயில் பயணம்.. அதுவும் 50 கி.மீ வேகத்தில்! கிம் ஜாங் உன்னின் பயண ரகசியம் இதுதான்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ரயில் பயணத்தை தொடங்கியுள்ளார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுமார் 1,180 கி.மீ தொலைவு இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் ஏன் ரயிலில் பயணம் செய்கிறார் என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது.
உலகமே ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்கையில் தனிப்பாதையில் ராஜநடை போடுபவர்தான் இந்த கிம் ஜாங் உன். தம்மாத்துண்டு நாடுதான் வடகொரியா. இருப்பினும் தன்னுடைய நாட்டு மக்களின் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விஷயத்திலும் இவர் சமரசமாக போவதில்லை. இதன் காரணமாகவே அந்நிய முதலீடுகள் அந்நாட்டில் தலைக்காட்டாமல் இருக்கின்றன. இன்னமும் அந்த நாட்டில் வேலையின்மை, வறுமை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஊழல்களும், சுரண்டல்களும் இல்லை என்று அந்நாட்டு தலைவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல ராணுவத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் அளவுக்கு இந்த வடகொரியா வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தனது பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் வடகொரியா, ரஷ்யாவுடன் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விரைவில் ரஷ்ய அதிபர் புதினை கிம் ஜாங் உன் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தற்போது ரயில் பயணத்தை தொடங்கியுள்ளார். நவீன ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் உருவாக்கியுள்ள வடகொரியா அதிபர் ஏன் ரஷ்யாவுக்கு ரயிலில் போகிறார் என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் வடகொரியாவின் பாரம்பரியம்தான். வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங் வழக்கமாக ரயிலில்தான் பயணிப்பார். அதே பாரம்பரியத்தை பின்பற்றி தற்போது கிம் ஜாங் உன்கும் ரயிலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த ரயில் சாதாரண ரயில் கிடையாது. இதில் மொத்தம் 20 பொட்டிகள் இருக்கின்றன. இந்த பெட்டிகள் அனைத்தும் குண்டு துளைக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது வெடிகுண்டு தாக்குதலிலும், ராக்கெட் லாஞ்சர் தாக்குதலிலும் இந்த பெட்டிகள் எதுவும் ஆகாது.

இந்த ரயிலில் ரஷ்ய, சீன, கொரிய, ஜப்பானிய மற்றும் பிரஞ்சு உணவு என எது வேண்டுமானாலும் கிடைக்கும். பாதுகாப்பு ஆயுதங்கள், செயற்கைக்கோளுடன் தொடர்பில் இருக்கும் கருவிகள், ஏவுகணைகளை முன் கூட்டியே எச்சரிக்கும் கருவி, அதை தடுத்து இடைமறித்து தாக்கும் வசதி ஆகியவை இதில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு சிறப்பம்சம் வாய்ந்த ரயில் மணிக்கு வெறும் 50 கி.மீ வேகத்தில்தான் நகரும்.
ஏனெனில் பாதுகாப்புக்காக அத்தனை ஆயுதங்களும் ஏற்றப்பட்டிருக்கும் நிலையில் இந்த வேகத்தில் செல்வதுதான் இந்த ரயிலுக்கு பாதுகாப்பு என்பதால் இதே வேகத்தில்தான் ரயில் செல்லும். பியாங்யாங்கில் தொடங்கி ரஷ்ய எல்லையில் உள்ள துமங்காங் நிலையம் வழியாக ரயில் செல்லும். பின்னர் அங்கு ரயிலின் சக்கரங்கள் ரஷ்ய தடங்களுக்கு மாற்றப்படும். இவ்வாறு தடங்கள் மாற்றவே சில மணி நேரம் வரை ஆகும். ஆக 1,180 கி.மீ தொலைவை ரயிலில் கடக்க குறைந்தது 6 நாட்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications