"இந்திய விமானங்களை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை!" மாலத்தீவு அந்தர் பல்டி! ஏன் இப்படி
மாலே: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என்பதை அந்நாட்டின் அதிபர் முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

விளக்கம்: இந்தச் சூழலில் தான் மாலத்தீவில் இருந்த அனைத்து இந்திய ராணுவத்தினரும் சமீபத்தில் வெளியேறினர். இது தொடர்பாக விளக்க மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசும் போது அவர் இந்தியா வழங்கிய விமானங்களை இயக்கும் திறன் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.
திறன் இல்லை: இது தொடர்பாகச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்திய ராணுவத்தால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் யாரும் இல்லை. சில வீரர்கள் இந்திய விமானத்தை இயக்கும் பயிற்சியைத் தொடங்கி இருந்தனர். இருப்பினும், அவர்கள் பயிற்சியில் பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டி இருந்ததால்.. பல்வேறு காரணங்களால் நமது வீரர்களால் அதை முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய விமானங்களை இயக்கும் லைசென்ஸ் மாலத்தீவு ராணுவத்தில் யாருக்கும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
மாலத்தீவு அதிபராக எப்போது முஸ்சு அதிபராகப் பதவியேற்றாரோ அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே மோதல் தான்.. தீவுகள் கூட்டமான மாலத்தீவில் ஒரு தீவில் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை எளிதாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே இந்த விமானங்களை இந்தியா வழங்கி இருந்தது. அதை ஆப்ரேட் செய்ய இந்திய ராணுவத்தினர் சுமார் 75 பேர் மாலத்தீவில் இருந்தனர்
மோதல் போக்கு: இருப்பினும், சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்சு எப்போது அதிபராகப் பதவியேற்றாரோ அப்போது முதலே இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அங்கு மொத்தம் 3 ராணுவ தளங்கள் உள்ள நிலையில், அனைத்து வீரர்களும் மே 10ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் முய்சு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்திய ராணுவமும் அனைத்து வீரர்களையும் வாபஸ் பெற்றுவிட்டது.
இந்திய ராணுவத்திற்குப் பதிலாக விமானத்தை இயக்க ராணுவம் சாராத வல்லுநர்களை இந்தியா அனுப்பி உள்ளது. ஏன் இந்தியர்கள் வர வேண்டும்.. அதற்கு பதிலாக மாலத்தீவு ராணுவ வீரர்களே இந்த விமானத்தை இயக்கலாமே என்ற கேள்விக்குத் தான் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

வல்லுநர்கள்: இந்திய ராணுவம் வெளியேறிய போதிலும், செனஹியா ராணுவ மருத்துவமனையில் உள்ள இந்திய மருத்துவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் எண்ணம் எதுவும் இல்லை என்று மாலத்தீவு அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இப்போது இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், அதற்குப் பதிலாக ராணுவத்தைச் சாராத வல்லுநர்கள் அந்த விமானங்களை இயக்க மாலத்தீவு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications