மங்கள்யான் செவ்வாய் சுற்றுப் பாதையில் நுழைந்ததை 'கன்பர்ம்' செய்தது ஆஸி. நிறுவனமாம்!
கான்பெர்ரா: இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வுக் கலமான மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழைந்தை, இந்தியாவின் இஸ்ரோவுக்கு உறுதி செய்து கூறியது ஒரு ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள கான்பெர்ரா ஆழ் விண்வெளி தகவல் தொடர்பு நிறுவனம்தான் Canberra Deep Space Communication Complex (CDSCC) இதுதொடர்பான சிக்னலை உறுதி செய்து இஸ்ரோவுக்குத் தெரிவித்துள்ளது.

இதை இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் பாட்ரிக் சக்லிங் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், இந்திய மக்களுக்கும், மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்காக ஆஸ்திரேலியா சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கான்பெர்ராவில் உள்ள சிடிஎஸ்சிசி நிறுவனம்தான் மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது தொடர்பான சிக்னலை உறுதி செய்து இந்தியாவுக்குத் தெரிவித்தது. அந்த வகையில் எங்களது ஆய்வு நிறுவனம் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளது பெருமை தருகிறது என்று கூறினார்.
பல்வேறு நாடுகளின் விண்வெளித் திட்டங்களில் கான்பெர்ரா நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மங்கள்யான் திட்டத்திலும் இது பங்கேற்றிருந்தது. அதாவது மங்கள்யானின் சிக்னல்களைப் பெற்று உறுதி செய்து தருவதை இந்த நிறுவனம் செய்துள்ளது. தனது டீப் ஸ்பேஸ் ஸ்டேஷன் 43 மூலம் இந்த சிக்னல்களைப் பெற்று இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளது.
மங்கள்யானிடமிருந்து வந்த சிக்னல்களை இந்த நிறுவனம் பெற்று அதை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி டிராக்கிங் அன்ட் கமாண்ட் நெட்வொர்க் அமைப்புக்கு அனுப்பியது. இதன்பின்னர்தான் மங்கள்யான் பயணம் வெற்றி என்பதை இஸ்ரோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
