கேரள இளைஞர் ரஷ்யாவில் யுத்த களத்தில் பலியான விவகாரம்.. வெளியுறவு அமைச்சகம் பரபர கருத்து
மாஸ்கோ: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், இந்தியர்கள் பலரும் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து இருப்பதாகவும் அவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பினில் (வயது 32) என்ற இளைஞர் யுத்த களத்தில் உயிரிழந்தார். மற்றொரு இந்தியரான ஜெயின் என்பவர் காயம் அடைந்தார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறுகையில், 'ரஷ்ய அரசிடம் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து செல்வோம்' என்று தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு எதிரான இந்த போரில் ரஷ்ய ராணுவத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியர்கள் பலரும் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து இருப்பதாகவும் அவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ராணுவத்திற்கு உதவியாளர் என்ற பெயரில் அவர்களை பணியில் அமர்த்தி மோசடி நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இப்படி ரஷ்யாவில் சிக்கிய பலரை இந்தியா விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது. இருப்பினும் இந்தியர்கள் சிலர் ரஷ்யாவில் இன்னும் பணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பினில் (வயது 32) என்ற இளைஞர் யுத்த களத்தில் உயிரிழந்தார். மற்றொரு இந்தியரான ஜெயின் என்பவர் காயம் அடைந்தார். பினில் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு இந்திய தூதரகம் வாய்மொழியாக கூறியுள்ளது. ரஷ்ய ராணுவம் இந்த தகவலை தெரிவித்ததாகவும் இந்திய தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:- ரஷ்ய அரசிடம் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து செல்வோம். ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள பிற இந்தியர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்துவோம். உயிரிழந்த பினில் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 85 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், "இன்னும் 20 இந்தியர்களை விடுவிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் புதினை கடந்த ஜூலை மாதம் சந்தித்த போது, பிரதமர் மோடி இவ்விவகாரம் குறித்து பேசினார். அதேபோல அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் புதினை சந்தித்த போதும் வலியுறுத்தி பேசினார்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications