குட்டி வீட்டுக்கு ரூ.2 கோடி.. முதலில் நோ சொல்லிவிட்டு.. இப்போ புலம்பும் சீன முதியவர்! என்ன காரணம்?
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த முதியவரின் வீட்டை நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக அந்நாட்டு அரசு கேட்ட போது, அதைத் தர அவர் மறுத்திருந்தார். இதனால் கட்டுமான ஊழியர்கள் வீட்டைச் சுற்றி சாலையை அமைத்துவிட்டனர். அப்போது கெத்தாகச் சீன அரசுக்கே நோ சொன்ன அந்த முதியவர், இப்போது சொந்த வீட்டிற்கே போகமுடியாமல் சுற்றி வருகிறாராம். இதற்கான காரணம் நம்மை ஆச்சரியப்படுத்தும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
எந்தவொரு சாலை திட்டத்திற்கும் அரசு பல நூறு பேரின் சொத்துகளை வாங்க வேண்டி இருக்கும். அப்போது தான் திட்டமிட்டபடி சாலைகளை அமைக்க முடியும். இதுபோல சொத்துகளை வாங்கும் போது அரசு மார்கெட் விலையைக் காட்டிலும் அதிகமாகத் தரும்.

அப்போது தான் மக்கள் வீடுகளைத் தர முன்வருவார்கள். ஆனால், அதையும் தாண்டி சிலர் தங்கல் சொத்தை தர முன்வர மாட்டார்கள். அதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது.
சீன முதியவர்:
சீனாவைச் சேர்ந்த முதியவர் ஹுவாங் பிங். இவர் சீனாவின் ஷாங்காய்க்கு தென்மேற்கே உள்ள ஜின்சி நகரத்தில் புறநகரில் வசித்து வருகிறார். இந்த பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்த சீன அரசு, அங்கு வசிக்கும் பொதுமக்களின் நிலத்தை எல்லாம் வாங்கியது. இருப்பினும், ஹுவாங் பிங், தனது வீட்டை விற்க மறுத்துவிட்டார். சாகும் வரை அந்த வீட்டில் தான் வாழ்வேன் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.
சீன அரசும் கூட பல முறை கேட்டுப் பார்த்துள்ளது. ஆனால், இவர் மறுத்துவிட்ட நிலையில், அவரது வீட்டைச் சுற்றி இப்போது நெடுஞ்சாலையை அமைத்துவிட்டது. இதனால் ஹுவாங் பிங் இப்போது இரு நெடுஞ்சாலைக்கு நடுவில் வசித்து வருகிறார். இந்த நெடுஞ்சாலை பணிகள் முழுமையாக முடிந்து, இன்னும் சில மாதங்களில் திறக்கப்பட உள்ளது.
வருத்தம்:
சீன அரசு வாங்க முன்வந்த போது மறுத்த ஹுவாங் பிங், இப்போது அதை நினைத்து வருந்துவதாக பிங் குறிப்பிடுகிறார். ஏனென்றால் சாலை கட்டுமான சத்தம், தூசி என மாசு அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கவே முடியவில்லை என்கிறார் ஹுவாங் பிங். இதனால் இப்போது ஹுவாங் பிங்கும் அவரது 11 வயது பேரனும் தினமும் அதிகாலை முதல் மாலை வரை வெளியே தான் சுற்றுகிறார்கள். கட்டுமான வேலை முடியும் நேரம், மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் தான் வீடு திரும்புகிறார்கள்.
வீட்டில் இருக்கவே முடியலையாம்:
நெடுஞ்சாலை திறக்கப்பட்ட உடன் நிலைமை இன்னுமே மோசமாகவே இருக்கும் என்பதை பிங் இப்போதே உணர்ந்துவிட்டார். வாகனங்களின் சத்தம், கார் ஹார்ன், காற்று மாசுக்கு நடுவில் நிச்சயம் வாழ முடியாது என பிங் வருந்துகிறார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "என்னால் நேரத்தில் பின்னோக்கி செல்ல முடிந்தால்.. அவர்கள் எனது வீட்டை வாங்க முன்வந்த போது அதை நிச்சயம் நான் ஒப்புக்கொள்வேன். இப்போது நான் ஒரு பெரிய பந்தயத்தில் தோற்றது போல் உணர்கிறேன். எனது முடிவுக்கு நானே வருத்தப்படுகிறேன் என்பதே உண்மை.
புலம்பும் சீன முதியவர்:
எனக்கு CNY 1.6 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.1.9 கோடி) மற்றும் இரண்டு இடங்களில் நிலம் தர முன்வருவதாகக் குறிப்பிட்டனர். பின்னர் இறுதியில் 3 இடங்களில் கூட நிலம் வழங்குவதாகக் குறிப்பிட்டனர். ஆனால், கூடுதல் இழப்பீட்டை அவர்கள் வழங்க வேண்டும் என நினைத்தேன். இதனால் அந்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டேன். ஆனால், இப்போது நான் எடுத்த முடிவை நினைத்துக் கவலைப்படுகிறேன். இது சீக்கிரம் பிஸியான நெடுஞ்சாலையாக மாறும். அப்போது என்ன செய்யப் போகிறேன் என புரியவில்லை" என்று புலம்பித் தள்ளுகிறார்.












Click it and Unblock the Notifications