காசா போரில் இஸ்ரேல் ராணுவத்திற்கு AI உதவி.. உண்மையை ஒப்புக் கொண்ட மைக்ரோசாப்ட்!
வாஷிங்டன்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் கம்யூட்டிங் தொழில்நுட்பத்தை விற்றிருப்பதாக மைக்ரோசாப்ட் ஒப்புக்கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் தனது தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் நடவடிக்கை விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு
ஏபி எனும் சர்வதேச செய்தி ஊடகம் நடந்திய ஆய்வில் இந்த உண்மைகள் தெரிய வந்திருப்பதாக கிரேட்டர் காஷ்மீர் எனும் ஆன்லைன் இதழ் செய்தியை வெளியிட்டிருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் பிறகுதான் இஸ்ரேல் ராணுவம் கொடூர போரை அறிவித்தது. போரில் ராணுவத்திற்கு மைக்ரோசாஃப்டின் Azure AI மற்றும் கிளவுட் சேவைகளை புலனாய்வு, மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கு கண்டறிதல் போன்ற பணிகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது.
மாஸ் சர்வைலன்ஸ்
முதலில் இஸ்ரேல் ராணுவம் மாஸ் சர்வைலன்ஸை நடத்தும். அதாவது ஒரு பெரிய கண்காணிப்பை மேற்கொள்ளும். உதாரணத்திற்கு வீடியோ ரெக்கார்டிங் என்று வைத்துக்கொள்ளலாம். எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து தங்களிடம் உள்ள ஹமாஸ் நபர்களின் புகைப்படத்தை கொண்டு தேடுதல் வேட்டையை மேற்கொள்ளும். சில லட்சம் பேரில் ஒரு நபரை தேடி கண்டுபிடிப்பது சாத்தியமில்லாதது. அதற்குதான் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் அடையாளம் காணப்பட்டவர்களை இஸ்ரேல் ராணுவம் போட்டு தள்ளும்.
தவறுகளுக்கு வாய்ப்பு
ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு தவறு செய்யாது என்பது உறுதியானது அல்ல. சில நேரங்களில் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு பதிலாக பொது ஜனங்களில் ஒருவரை இந்த ஏஐ காட்டி கொடுக்கிறது எனில், அவர்கள் உயிரிழக்க நேரிடலாம். மனித உரிமை குழுக்கள் தற்போது இந்த விஷயத்தை கவலையாக எழுப்பியிருக்கின்றன.
இப்படியான பிரச்சனை கிளம்பியதையடுத்து, தங்களது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறுகள் நடந்திருக்கிறதா? என்பதை கண்டறிய மறு ஆய்வு செய்ய தொடங்கியதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது.
மைக்ரோசாப்ட்டின் ரிப்ளை
மேலும், "எங்களுக்கு என சில கட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறோம். எங்கள் சேவைகளை பயன்படுத்தும் எவரும் இந்த கட்டுப்பாடுகளை பின்றபற்ற வேண்டும். அந்த வகையில், இஸ்ரேல் ராணுவமும் அதற்கு கடமைப்பட்டிருக்கிறது. நாங்கள் நடந்திய ஆய்வில் ராணுவம் முறைகேட்டில் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
எழும்பும் சந்தேகங்கள்
எலக்ட்ரானிக் ஃபிரான்டியர் பவுண்டேஷன் எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிண்டி கோன் இது குறித்து கூறுகையில், "இவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இது போதாது. இன்னும் வெளிப்படைத்தன்மை வேண்டும். இஸ்ரேல் நீண்ட காலமாக ராணுவ பயன்பாட்டுக்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பயன்படுத்தி வருகிறது என்பது குறித்து சில விஷயங்களை பேச வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஆதாரம் இருக்கிறது
இவ்வளவு பஞ்சாயத்துகளுக்கு ஆதாரப்பூர்வமான காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்ரேல் ராணுவம் ராஃபாவில் ஒரு மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 2 இஸ்ரேலிய பயண கைதிகள் மீட்கப்பட்டனர். இருப்பினும் இதற்காக 60 பாலஸ்தீனர்களை கொன்றனர். இதற்கெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லது, இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்ளும் இதுபோன்ற அநியாயங்களுக்கு இந்நிறுவனம் துணை போகிறது என்பதுதான் குற்றச்சாட்டு.
இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பது மைக்ரோசாப்ட் மட்டும் கிடையாது. கூகிள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் இஸ்ரேலுக்கு உதவியுள்ளதால் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications